நைஜீரியாவில் தேவாலயத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் உயிரிழப்பு; பலர் மருத்துவமனையில் அனுமதி

நைஜீரியா : நைஜீரியாவின் தேவாலயம் ஒன்றில் மர்ம நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.  ஓண்டோ மாகாணத்தில் உள்ள ஒவோ என்ற இடத்தில் உள்ள தேவாலயத்தில் நேற்று பிரார்த்தனை நடைபெற்று கொண்டு இருந்தது. குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென தேவாலயத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். சில கையெறி குண்டுகளும் வீசப்பட்டன.

துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவெடிப்பில் சிக்கி நிகழ்விடத்திலேயே 22 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 70 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பலர் அடுத்தடுத்து உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. கவலைக்கிடமான நிலையில் 20 பேர் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. பலியானவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆவர். தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் தேவாலயத்தின் பாதிரியாரை கடத்திச் சென்றுள்ளதால் தாக்குதலுக்கு மத ரீதியிலான காரணம் உள்ளதா என ஓண்டோ மாகாண காவல்துறை விசாரித்து வருகிறது.  ஓண்டோ மாகாணத்தில் சமீபகாலமாக விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக துப்பாக்கிச் சூடு நடந்ததா என்றும் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். 

Related Stories: