மத்தியில் ஆட்சி அதிகாரம் இருப்பதால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த பாஜ முயற்சி: அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

புதுக்கோட்டை: மத்தியில் ஆட்சி அதிகாரம் இருப்பதால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த பாஜ முயற்சி செய்வதாக அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று அளித்த பேட்டி: ஆன்லைன் ரம்மி லாட்டரி உள்ளிட்டவற்றை ஒழிக்க வேண்டியதில் ஈபிஎஸ், ஓபிஎஸ்சை விட எங்களுக்கு அக்கறை அதிகம். காவல்துறை ஐபிசி படி தகுந்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆன்லைன் ரம்மி தொடர்பான சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு தற்போது அது நிலுவையில் உள்ளது. எனவேதான் புதிய சட்டம் கொண்டு வரவில்லை.

இந்தியாவிலேயே பாஜ போன்ற அசிங்கமான அரசியல் கட்சி இல்லை என்பதற்கு உதாரணமாக அவர்கள் நேற்றைய தினம் (நேற்றுமுன்தினம்) புதுக்கோட்டை வழக்கறிஞர் சங்கத்தில் நடந்து கொண்டனர். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்கப்பட்டால் புதுக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கலைஞரின் பிறந்தநாளை கொண்டாடினர். அதற்கு பாஜகவை சேர்ந்த 5 வழக்கறிஞர்கள் வெளியில் உள்ள நபர்களை அழைத்து வந்து ரகளையில் ஈடுபட்டனர். மத்தியில் ஆட்சி அதிகாரம் அவர்களுக்கு இருப்பதால் தமிழகத்தில் ஏதேனும் சட்ட ஒழுங்கை ஏற்படுத்தி பிரச்னையை ஏற்படுத்த வேண்டும் என்று  முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அவர்களின் கனவு ஒருபோதும் நிறைவேறாது. அது பகல் கனவாகவே போய்விடும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: