பாபநாசம் அருகே மெலட்டூரில் இருளர் சமுதாய 20 குடும்பத்தின் மாணவர்களுக்கு சாதி சான்றிதழ்-கலெக்டர் வழங்கினார்

தஞ்சாவூர் : பாபநாசம் அருகே மெலட்டூரில் இருளர் சமுதாய 20 குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சாதி சான்றிதழ் வழங்கினார்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வளையப்பேட்டை ஊராட்சியில் ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.1.19 லட்சத்தில் சமுதாய பண்ணை குட்டை அமைக்கும் பணியினையும், வளையபேட்டை ஊராட்சியில் 200 மரக்கன்றுகள் ரூ.2 லட்சத்தில் குருங்காடுகள் அமைக்கும் பணியினையும், கோவிலாச்சேரியில் ரூ.23.56 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டுமானப் பணி நடைபெற்று வருவதையும் பார்வையிட்டார். மேலும் ரூ.20 லட்சத்தில் நீர்வளத் துறை சார்பில் கும்பகோணம் அருகே கொண்டாங்குடி, மாங்குடி மற்றும் கொரநாட்டுக்கருப்பூர் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து மேற்கண்ட பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தினார்.

திருவிடைமருதூர் அருகே விஸ்வநாதபுரத்தில் மீரா என்பவர் இலவச வீட்டு மனை பட்டா கோரி கலெக்டரிடம் தனது செல்பேசி மூலம் கோரிக்கை விடுத்ததன் பேரில் மனுதாரர் வீட்டிற்கே சென்று இலவச வீட்டுமனைப் பட்டாவை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.முன்னதாக பாபநாசம் அருகே மெலட்டூரில் இருளர் சமுதாயத்தை சேர்ந்த 20 குடும்பங்கள் சாலை ஓரத்தில் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். இவர்களின் பிள்ளைகளுக்கு மேற்படிப்பு படிக்க வைக்க ஏதுவாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரடியாக ஒவ்வொருவர் வீட்டிற்கும் சென்று பள்ளியில் படித்து வரும் இருளர் இன மாணவ, மாணவிகளுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழை வழங்கினார். பல ஆண்டுகளுக்கு பிறகு சாதி சான்றிதழ் கிடைத்த மகிழ்ச்சியில் கலெக்டருக்கு நன்றி தெரிவித்தனர்.

ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் வருவாய் சுகபுத்ரா, கும்பகோணம் ஆர்டிஓ லதா, தாசில்தார்கள் தங்க பிரபாகரன்(கும்பகோணம்), சந்தனவேல்(திருவிடைமருதார்), மதுசூதனன்(பாபநாசம்). வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன். சூரியநாராயணன், உதவி பொறியாளர் கார்த்திகேயன், பேரூராட்சி உதவி இயக்குனர் கனகராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: