நெல்லை அருகே விதவை தாய், 2 மகளுக்கு இன்ஸ்பெக்டர் மிரட்டல்-குடும்பத்துடன் டிஐஜியிடம் பரபரப்பு புகார்

கேடிசி நகர் :  திசையன்விளை தாலுகா திருமலாபுரம் அருகே வடக்கு இளங்குளம் ஆர்சி கோவில் தெருவைச் சேர்ந்த அந்தோனி பிரான்சிஸ் மனைவி சேவியர் மலர்விழி. இவர் தனது தாய் மேரிபாப்பு மற்றும் தங்கை ரோசாரி சாந்தி ஆகியோருடன் நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமாரை சந்தித்து மனு அளித்தனர். மனுவில் சேவியர் மலர்விழி கூறியிருப்பதாவது: எனது தந்தை இறந்து விட்டார். எனது கணவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இதுபோல் தங்கையின் கணவரும் வெளியூரில் டிரைவராக வேலை பாாத்து வருகிறார் இதனால் நாங்கள்(தாய், 2 மகள்) 3பேரும் மேற்கண்ட முகவரியில் தனியாக வசித்து வருகிறோம். விதவையான எங்களது தாய்க்கு நாங்கள் 2 பெண்கள் மட்டும்தான்.

ஆண் வாரிசு கிடையாது. இட பிரச்னை தொடர்பாக விஜயநாராயணம் போலீசில் புகார் செய்தோம். ஆனால் விஜயநாராயணம் காவல் ஆய்வாளர் மற்றொரு தரப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.போலீசில் புகார் செய்ததை தொடர்ந்து என் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து நான் நெல்லை ஐகிரவுண்ட் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றேன். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் என்னை இழிவாக பேசியதுடன் என்மீது வழக்கு பதிவு செய்து கைது செய்வேன் என மிரட்டல் விடுத்தார். எங்களை அவதூறாக பேசிய விஜயநாராயணம் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Related Stories: