சீர்காழி அருகே திருநாங்கூரில் 12 சிவபெருமான்களுக்கு திருக்கல்யாண உற்சவம்

சீர்காழி: சீர்காழி அருகே திருநாங்கூரில் 12 சிவபெருமான்களுக்கு திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருநாங்கூரில் மதங்காஸ்ரமத்தில் மதங்கரிஷி தவம் செய்யும்போது பார்வதிதேவி பெண்ணாக அவதரித்து பின்பு சிவபெருமானை திருமணம் செய்து கொண்டு மதங்க ரிஷிக்கு திருமணக்கோலத்தில் காட்சி கொடுத்ததாகவும், அதை தொடர்ந்து 12 சிவபெருமான்கள் அம்பாள்களுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருக்கல்யாண கோலத்தில் வீதியுலா செல்லும் ஐதீக விழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான விழாவில் 12 சிவபெருமான்கள் திருகல்யாண வைபவம் வெகு விமர்சையாக நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு திருநாங்கூர் ஸ்ரீஅஞ்சனாக சமேதஸ்ரீ மதங்கீசுவர சுவாமி, திருக்காட்டுபள்ளி ஸ்ரீ அகிலாண்டேசுவரி சமேத ஸ்ரீ ஆரண்யேசுவரசுவாமி, திருயோகீசுவரம் ஸ்ரீ யோகாம்பிகை சமேத ஸ்ரீயோகநாதசுவாமி, திருசொர்ணபுரம் ஸ்ரீசொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரசுவாமி, திருநாங்கூர் ஸ்ரீ சந்திராசு அம்பாள் சமேத ஸ்ரீஅமிர்தபுரீசுவர சுவாமி, செம்பதனிருப்பு ஸ்ரீ நற்றுணைநாயகி சமேத ஸ்ரீநாகநாதசுவாமி, திருநாங்கூர் ஸ்ரீ நம்பிரியான் சமேதஸ்ரீ நம்புவார்கன்யசுவாமி, திருநாங்கூர் ஸ்ரீ காமாட்சி சமேத ஸ்ரீ கைலாசநாதசுவாமி, திருமேனிக்கூடம் ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத ஸ்ரீ சுந்தரேசுவர சுவாமி, பெருந்தோட்டம் ஸ்ரீ அதிதுல்ய குஜாம்பிகை சமேத ஸ்ரீ ஐராவதேசுவர சுவாமி, அன்னப்பன்பேட்டை ஸ்ரீ சுந்தரநாயகி சமேத ஸ்ரீ கலக்காமேசுவரசுவாமி, நயினிபுரம் ஸ்ரீ நளினாம்பிகை சமேத நயனவரதேசுவசுவாமி ஆகிய 12 சிவபெருமான் திருநாங்கூர் கீழவீதி மதங்காஸ்ரமம் எனும் மதங்கீசுவரர்சுவாமி கோயில் முன்பு எழுந்தருளினர்.

தொடர்ந்து சிறப்பு வழிபாடுகளுக்கு பிறகு 12 சுவாமி அம்பாள்களும் ரிஷப வாகனங்களில் எழுந்தருளினர். பின்பு சுவாமி அம்பாள் திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருகல்யாண கோலத்தில் மதங்க ரிஷிக்கு காட்சி கொடுத்தனர். பின்னர் வேதபாராயணம் திருமுறை பாராயணம், கைலாய வாத்தியங்கள், பஞ்சவாத்தியங்கள் நாகசுவர இன்னிசை கச்சேரியுடன் வாணவேடிகைகள் முழங்க 12 சிவபெருமான்கள் அம்பாள்களுடன் திருவீதியுலா செல்லும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை மற்றும் பக்தர்கள் இணைந்து செய்திருந்தனர்.

Related Stories: