பிரதமரின் தாரக மந்திரப்படி பெஸ்ட் புதுச்சேரியை... பாஸ்ட் புதுச்சேரி ஆக மாற்ற நடவடிக்கை: கவர்னர் தமிழிசை பேச்சு

புதுச்சேரி: பிரதமர் மோடியின் தாரக மந்திரப்படி பெஸ்ட் புதுச்சேரி விரைவில் பாஸ்ட் புதுச்சேரியாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கவர்னர் தமிழிசை கூறினார்.  மத்திய அரசின் பல்வேறு திட்டப் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடும் நிகழ்ச்சி இன்று புதுச்சேரி அரசு சார்பில் கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் தமிழசை சௌந்தரராஜன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திட்ட அரங்குகளைத் திறந்து வைத்தார். பிறகு மத்திய அரசின் பல்வேறு திட்டப் பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.

முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பொதுப்பணித்துறை அமைச்சர்  லட்சமி நாராயணன், வேளாண் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், செல்வகணபதி எம்பி, அனிபால் கென்னடி எம்எல்ஏ, தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, ஊரக வளர்ச்சித்துறைச் செயலர் ரவி பிரகாஷ், மாவட்ட ஆட்சியர் வல்லவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது: பெண்கள் முன்னேறினால் வீடு முன்னேறும் நாடு முன்னேறும் என்பதால்  உஜ்வாலா என்ற இலவச எரிவாயு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம், முத்ரா வங்கி கடன் திட்டம் போன்றவை வழங்கப்படும் போது குறிப்பிட்ட சதவீதம் பெண்களுக்கும், அட்டவணை இனத்தவர் பழங்குடியினர் ஆகியோரக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற குறிப்பிடப்படுகிறது. அதனால் இந்த திட்டங்கள் பரவலாக எல்லா பிரிவினருக்கும் சென்று சேர்ந்திருக்கிறது. திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு முழுமையாகச் சென்று சேர வேண்டும். நிர்வாகக் குறைபாடு காரணமாகவோ அல்லது நிறுவனத்தோடு செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாகவோ சில பயனாளிகளுக்கு கிடைப்பது தாமதமாகலாம்.

ஆனால் மறுக்கப்படாது. எந்த திட்டத்தின் பயனும் யாருக்கும் மறுக்கப்படாது என்பதை புதுச்சேரி மக்களுக்கு உறுதியாக சொல்லிக் கொள்கிறேன். புதுச்சேரி எல்லா வகையிலும் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரதப் பிரதமர் “பெஸ்ட் புதுச்சேரி“ என்ற தாரக மந்திரத்தைக் கொடுத்திருக்கிறார். நேற்று தலைமைச் செயலருடன் கூட்டம் நடத்தி “பெஸ்ட் புதுச்சேரி“ “பாஸ்ட் புதுச்சேரி“ ஆகவும் (வேகமான புதுச்சேரி) இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். மக்களுக்கு கிடைக்க வேண்டிய திட்டங்கள், ஊக்கத்தொகை உள்ளிட்ட பயன்கள் அனைத்தும் மிக விரைவாக செயல்படுத்துவதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்ளப்படுகிறது.

இதில் குறைபாடுகளைக் களைந்து மக்களுக்கு சென்று சேர்வதற்கான அத்தனை முயற்சிகளும் நடைபெற்று வருகிறது. பிரதமர் தலைமை பொறுப்பேற்று 8 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இந்த எட்டு ஆண்டுகளில் மூன்று ஆண்டுகள் மிகவும் சவாலான காலம். கொரோனா பெருந்தொற்றை சந்தித்தோம். சரியான நேரத்தில் சரியான மருத்துவ உபகரணங்களை மற்றும் தடுப்பூசி கொடுத்து இந்திய மக்களை மட்டுமல்லாமல் உலகத்தில் உள்ள பல நாடுகளில் உள்ள மக்களையும் காப்பாற்றிய பாரத பிரதமரின் முயற்சி பாராட்டுக்குரியது. இந்த தடுப்பூசி மாடல் உலகில் மிகப்பெரிய வெற்றியைத் தந்திருக்கிறது.

புதுச்சேரியைப் பொறுத்தமட்டில் மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது பாரத பிரதமர் புதுச்சேரிக்கு பல நல்ல திட்டங்களை வழங்க இருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரிக்கு வந்த போதும் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தினார்கள். காரைக்கால் ஒதுக்கப்படுகிறது. காரைக்காலை கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. எந்த வகையிலும் எந்த பகுதியும் உதாசீனம் அடையாமல் இருப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவிலேயே பெட்ரோல்-டீசல் விலை புதுச்சேரியில்தான் மிகக் குறைந்து காணப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார். விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசும்போது, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிப்படி செயல்படுத்தப்படும் திட்டங்கள் மக்களுக்கு சிறப்பாக சென்று சேருகின்றதா என்பதை ஆய்வு செய்கின்றதா என்பதை இந்நிகழ்ச்சி உறுதி செய்கிறது. மத்திய அரசின் மானியங்கள் வங்கிகள் மூலமாக பொதுமக்களுக்கு சென்று சேருகின்றதா என்பதை உறுதி செய்கிறது. ஏழை எளிய மக்களுக்கு அரசின் சேவைகள் சென்று சேர வேண்டும் என்று பிரதமர் மோடி அனைத்து நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருவதால் புதுவையும் பயன்பெறுகின்றது என்பது நிரூபணமாகிறது. மத்திய அரசின் திட்டங்களுடன். மாநில அரசின் திட்டங்களையும் இணைத்து செயல்படுத்தினால் மக்களின் விருப்பத்தை முழுவதுமாக பூர்த்தி செய்ய முடியும் என்றார்.

Related Stories: