குமரியில் கன்னிப்பூ சாகுபடிக்கு பேச்சிப்பாறை அணை நாளை திறப்பு?

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணை நாளை திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. தென் மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியுள்ள நிலையில் குமரி மாவட்டத்திலும் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இதனால் அணைகளில் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. மாவட்டத்தில் நேற்றும் பரவலாக மழை பெய்தவண்ணம் காணப்பட்டது.

தொடர்ந்து பெய்த மழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்ததால் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் மறுகால் வழியாக திறந்துவிடப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம்  45.10 அடியாக இருந்தது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 769   கன அடி ஆகும். அணையில் இருந்து உபரி நீர் வினாடிக்கு 913  கன அடி திறந்துவிடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம்  56.55  அடி ஆகும்.

நீர் வரத்து 396 கன அடி ஆகும். தண்ணீர் வெளியேற்றம் இல்லை. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம்  27.07 அடி ஆகும். நீர் வரத்து 2 கன அடியாக இருந்தது. வெளியேற்றம் இல்லை. பொய்கை அணை நீர்மட்டம் 17.70 அடி ஆகும். அணைக்கு நீர் வரத்து இல்லை, வெளியேற்றமும் இல்லை. சிற்றார்-1ல்  12.94      அடியாக நீர்மட்டம் காணப்பட்டது. நீர் வரத்து 48 கன அடியாக இருந்தது. வெளியேற்றம் இல்லை. சிற்றார் 2ல் 13.05  கன அடியாக நீர்மட்டம் காணப்பட்டது.

நீர் வரத்து 72 கன அடியாக இருந்தது. தண்ணீர் வெளியேற்றம் இல்லை. குமரி மாவட்டத்தில் பாசனத்திற்காக ஜூன் முதல் வாரம் அணைகள் திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஜூன் 1ம் தேதி அணைகள் திறக்க வசதியாக முன்கூட்டியே கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்றது. கடைவரம்பு வரை தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கன்னிப்பூ சாகுபடிக்காக நாளை அணைகளை திறக்க தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: