காங்கிரசில் இருந்து விலகிய நிலையில் நாளை மறுநாள் குஜராத் மாநில பாஜக தலைவர் முன்னிலையில் பாஜவில் இணைகிறார் ஹர்திக் பட்டேல்..!

அகமதாபாத்: நான் பாஜவில் சேரவில்லை என்றும் அதுகுறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஹர்திக் படேல் கடந்தவாரம் கூறியிருந்த நிலையில், அவர் வரும் 2ம் தேதி பாஜவில் இணைவதாக கூறப்படுகிறது. குஜராத் காங்கிரஸ் செயல் தலைவர் ஹர்திக் படேல் கடந்த வாரம், தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘காங்கிரஸ் கட்சியின் பதவியில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நான் தைரியமாக ராஜினாமா செய்திருக்கிறேன். எனது முடிவை காங்கிரஸ் கட்சியினரும், குஜராத் மக்களும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன். குஜராத்தின் எதிர்கால வளர்ச்சிக்காக நான் பணிபுரிவேன்’என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியிருந்த கடிதத்தில், ‘நாட்டின் வளர்ச்சிக்கும் சமூகத்தின் வளர்ச்சிக்கும் காங்கிரஸ் தடையாக உள்ளது. மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டையாக இருக்கிறது’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இன்று அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஹர்திக் படேல் பேசுகையில், ‘தான் தேர்தலில் போட்டியிட போவது குறித்தும் சூசகமாக கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய ஹர்திக் படேல், தான் பாஜவில் இணைய போவதாகவும், பேரவை தேர்தலில் எந்த தொகுதியில் இருந்து, தான் போட்டியிட வேண்டும் என்பதை கட்சி தலைமைதான் முடிவு செய்யும் என்றும் சோமநாதர் ஆலயத்தில் இருந்து ஏக்தா யாத்திரை எனும் பேரணியை தலைமையேற்று நடத்த இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே இம்மாத தொடக்கத்தில் டுவிட்டர் பக்கத்தில் ‘குஜராத் காங்கிரஸ் செயல் தலைவர்’ பதவியையும் ‘கை’ சின்னத்தையும் நீக்கியிருந்தார். இதனிடையே, அவர் பாஜவில் இணைய இருப்பதாக பல்வேறு தகவல்கள் வந்தவண்ணம் இருந்தன. இன்று அதை அவர் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: