கருங்கல் அருகே கடன் தொல்லையால் ஆசிரியர் தற்கொலை

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள வட்டக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சின்டோராஜ் (34). ஸ்போக்கன் இங்கிலிஷ் பயிற்சி மையத்தில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கொரோனா கால கட்டத்தில் பயிற்சி மையங்கள் செயல்படாததால் வருமானம் இல்லாமல் சின்டோ ராஜ் மிகவும் கஷ்டப்பட்டு வந்தார். இந்த நிலையில் தனது தங்கை திருமணத்துக்கு ரூ.15 லட்சம் வரை கொடுத்ததாகவும், இதனால் அதிக கடன் சுமை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடன் தொகையை உரிய முறையில் திரும்ப செலுத்த முடியாமல் சின்டோராஜ் மிகவும் கஷ்டப்பட்டு வந்தார். இது குறித்து தனது மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் கூறி வருத்தப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் நேற்று (30ம்தேதி) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சின்டோ ராஜ் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். வெளியே சென்று இருந்த அவரது மனைவி நிவியா (34) திரும்பி வந்து பார்த்த போது சின்டோ ராஜ் தற்கொலை செய்திருந்தது தெரிய வந்தது. இதை பார்த்ததும் அவர் கதறி அழுதார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர்.

இதையடுத்து கருங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சின்டோ ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Related Stories: