கூடலூர் அருகே பராமரிப்பின்றி புதர்மண்டிக் கிடக்கும் பென்னிகுக் மணிமண்டபம்-சீரமைக்க சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை

கூடலூர் : கூடலூர் அருகே, பராமரிப்பின்றி புதர்மண்டிக் கிடக்கும் பென்னிகுக் மணிமண்டபத்தை சீரமைக்க, சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.முல்லைப்பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் ஜான்பென்னிகுக்கை நினைவுகூறும் விதம், தேனி மாவட்டம், கூடலூர் நகராட்சி 21வது வார்டு பகுதியான லோயர்கேம்ப்பில் தமிழக அரசு சார்பில் ரூ.1.25 கோடியில், பென்னிகுக்கின் முழு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மணிமண்டபத்தை தினசரி பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் பார்வையிட்டு செல்கின்றனர். சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களும், தேக்கடிக்கு செல்லும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், பள்ளி மாணவ, மாணவியரும் பென்னிகுக் மண்டபத்தில் உள்ள பென்னிகுக்கின் சிலை, பெரியாறு அணை மாதிரி மற்றும் அணை குறித்த புகைப்படங்களையும் பார்வையிட்டுச் செல்கின்றனர்.

இந்த மணிமண்டபத்தை சுற்றி பல லட்சம் ரூபாய் செலவில் வெளிநாட்டு புற்கள், பல்வேறு பூச்செடிகள், வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால்,

பென்னிகுக் மண்டபம் பசுமை நிறைந்த, புற்களுக்கு நடுவே பார்க்க அழகாக இருந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மணிமண்டபம் பராமரிக்கப்படாததால், அதைச்சுற்றி புற்கள் வளர்ந்து புதர்மண்டிக் கிக்கிறது. இதை சீரமைக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், ‘இயற்கை சூழலுக்கு நடுவே உள்ள இந்த மணிமண்டபத்தைக் காண ஏராளமானோர் வருகின்றனர். மண்டபத்தை சுற்றி புதர்மண்டிக் கிடக்கிறது. இதை அகற்ற பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: