போச்சம்பள்ளி பகுதியில் சாலையில் கொட்டப்படும் அழுகிய மாம்பழங்கள்

போச்சம்பள்ளி : போச்சம்பள்ளி அருகே சாலையோரம் கொட்டப்படும் அழுகிய மாம்பழங்களால் கடும் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா சீசன் துவங்கி உள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு மா விளைச்சல் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இடி, மின்னல், சூறாவளிக்கு மா உதிர்ந்த நிலையில், எஞ்சிய காய்கள் தான் அறுவடைக்கு வந்துள்ளது. மாவட்டத்தில் மா விளைச்சலில் முதலிடம் வகிக்கும் போச்சம்பள்ளி தாலுகாவில் தற்போது மா அறுவடை சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. அறுவடை செய்யப்பட்ட மாங்காய்களை விவசாயிகள் லாரி மற்றும் டெம்போ மூலம் எடுத்துச் சென்று மண்டிகளில் விற்பனை செய்து வருகிறார்கள்.

அந்த மாங்காய்களை வியாபாரிகள் சுத்தம் செய்து, கழிவுகளை பிரித்தெடுத்து சாலையோரம் கொட்டிச் செல்வது வாடிக்கையாக உள்ளது. சந்தூரிலிருந்து வேலம்பட்டி செல்லும் மெயின் சாலையில் பல்வேறு இடங்களில் மா கழிவுகளை கொட்டி வருகிறார்கள். இதனால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மெயின் சாலை என்பதால் வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன.

சாலையில் கொட்டப்படும் கழிவு மாங்காய்களால் ஈ உற்பத்தியும் அதிகரித்துள்ளது. இதனால், சுகாதார சீர்கேடு அபாயம் உருவாகியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டு சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் மா கழிவுகளை கொட்டுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: