தினம் கத்தி கதறியதால் தூக்கம் போச்சு கிணற்றுக்குள் விழுந்த பூனைக்குட்டி 6 மாதத்திற்கு பின் உயிரோடு மீட்பு: கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு

பாப்பாரப்பட்டி: பாப்பாரப்பட்டி அருகே பாழடைந்த கிணற்றுக்குள் தவறி விழுந்த பூனைக்குட்டி 6 மாதத்திற்கு பின்பு பத்திரமாக மீட்கப்பட்டது. தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பாரதிதாசன் தெருவில் 40 அடி ஆழ பொது கிணறு உள்ளது. இந்த கிணறு தண்ணீரின்றி குப்பை -கூளங்கள் போடப்பட்டு பயன்பாடின்றி காட்சியளிக்கிறது. இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் இந்த பொது கிணற்றில் பூனை ஒன்று தவறி விழுந்து விட்டது. இரவு-பகல் தொடர்ந்து கத்திக் கொண்டே இருந்ததால் அதனை மீட்பதற்கு அப்பகுதி மக்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

பக்கெட்டில் கருவாடு வைத்து கயிறு கட்டி கீழே இறக்கினர். ஆனால், ருசி கண்ட பூனை கருவாட்டை சாப்பிட்டு விட்டு பக்கெட்டில் இருந்து எகிறி குதித்து கிணற்றிலேயே தஞ்சம் அடைந்து விட்டது. இதனைத்தொடர்ந்து தெருவாசிகள் தினமும் பக்கெட்டில் தோசை, தயிர் சாதம், கருவாடு உள்ளிட்ட உணவுகளை வழங்கி வந்தனர். 6 மாதத்தில் பூனைக்குட்டி பெரிதாக வளர்ந்து விட்டது. இரவு நேரத்தில் ஊரே அடங்கிய வேளையிலும் ஓய்வின்றி பூனை கத்திக் கொண்டிருந்ததால் கிராம மக்கள் தூக்கத்தை இழந்து தவித்தனர்.

 இதையடுத்து, கிணற்றில் இருக்கும் பூனையை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு தெருவாசிகள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து பாலக்கோடு தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில், மீட்புக்குழுவினர் பாப்பாரப்பட்டிக்கு வந்து கிணற்றில் இறங்கி கயிறு கட்டி பூனையை மீட்டு ஒரு சாக்குப்பையில் போட்டு கட்டி மேலே கொண்டு வந்தனர். பையை அவிழ்த்து விட்டதும் பூனை துள்ளிக் குதித்து அங்கிருந்து ஓடி மறைந்தது. 6 மாதம் கிணற்றுக்குள் தவித்து வந்த பூனையை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் கிணற்றில் இருந்து உயிருடன் மீட்டது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories: