மதுராந்தகம் அருகே மோச்சேரியில் திரவுபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா

மதுராந்தகம்: மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட மோச்சேரி கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. இங்கு அக்னி வசந்த விழா, கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைத் தொடர்ந்து திரவுபதி அம்மனுக்கு பல்வேறு அபிஷேக, ஆராதனை மற்றும் பூஜைகள் நடந்தது. மேலும் ஜலகிரீடை, வில் வளைப்பு, சுபத்திரை மாலையிடுதல், ராஜ சுப யாகம், துயில் உறிதல், அர்ஜுனன் தபசு, விராட பருவம், கிருஷ்ணன் தூது, கர்ணன் மோட்சம், பதினெட்டாம் போர் உள்ளிட்ட நாடகங்கள் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று திரவுபதி அம்மன் ஆலய வளாகத்தில் துரியோதனன் படுகள நிகழ்ச்சி நடந்தது.

இதில் கலைஞர்கள் பலர், திரௌபதி, கிருஷ்ணன், பீமன், துரியோதனன்  வேடமிட்டு துரியோதனனை வதம் செய்யும் நிகழ்வை நடித்து காண்பித்தனர். இதைத் தொடர்ந்து திரவுபதி அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இரவு திரவுபதி அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களிடையே எழுந்தருளி வீதியுலாவாக வந்தார். விழாவில் சென்னை, புதுச்சேரி, திண்டிவனம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து  வந்திருந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: