உசிலம்பட்டி அருகே கிராமமக்கள் சாலை மறியல்

உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே ஆக்கிரமித்து கோயில் கட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராமமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உசிலம்பட்டி அருகே ராஜக்காப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது எம்.பாறைபட்டி கிராமம். இக்கிராமத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இதில் சில குடும்பத்தை சேர்ந்தவர்கள் கிராம மக்களிடையே கலந்து ஆலோசிக்காமல் தனியாக முடிவெடுத்து அப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு மலைப்பகுதியில் கடந்த 40 நாட்களுக்கு முன்பு பெருமாள் கோயில் அமைத்து பூஜை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் ஓடையை ஆக்கிரமித்து விளக்குத்தூணும் அமைத்துள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராமமக்கள் அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இதன்பிறகு வருவாய்த்துறை அதிகாரிகள் அப்பகுதியை அளவீடு செய்தனர். ஆனால் அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கோயிலை கட்டியவர்கள் நாளை மண்டல பூஜை நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆக்கிரமித்து கோயில் கட்டியுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் உசிலம்பட்டி எழுமலை சாலையில் நேற்று கிராமமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஆறுமுகம், எழுமலை காவல்நிலைய சார்பு ஆய்வாளர் செல்வம் சாலை மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து கிராமமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: