மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் சுதந்திர போராட்ட வரலாறு விளக்க புகைப்பட கண்காட்சி-கலெக்டர் தொடங்கி வைத்தார்

தர்மபுரி : தர்மபுரியில் சுதந்திர போராட்ட வரலாறு தொடர்பான 3 நாள் புகைப்பட கண்காட்சி மற்றும் ஒருங்கிணைந்த மக்கள் சேவை முகாம் செந்தில்நகர் திருமண மண்டபத்தில் வரும் 29ம் தேதி வரை நடக்கிறது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த கண்காட்சி மற்றும் முகாம் நடக்கிறது. இந்த முகாமை மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி தொடங்கி வைத்து, கண்காட்சியை பார்வையிட்டார். பின்னர் கலெக்டர் பேசியதாவது:

‘வல்லரசு நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற, இந்தியர்களின் கடும் உழைப்பே காரணமாக அமைந்துள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இந்தியர்களின் அறிவாற்றலுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. வேறெந்த வல்லரசு நாட்டினருக்கும் கிடைக்காத வாய்ப்பு இது. இந்திய இளைஞர்களின் திறனை கண்டு பல நாடுகள், இதுபோன்றவர்களை தங்கள் நாட்டவராக்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு அளப்பரியது. இந்திய விடுதலைக்காக எந்தவித சுயநலமின்றி நாட்டின் வளர்ச்சி, நாட்டின் விடுதலையை மட்டுமே கருத்தில் கொண்டு எண்ணற்ற தலைவர்கள் பாடுபட்டுள்ளனர்.

நாட்டின் விடுதலையும், வளர்ச்சியும் மட்டுமே அவர்களின் எண்ணத்தில் இருந்ததால் பல ஆண்டுகள் கடந்தும் கூட அந்த தலைவர்கள் நம் எண்ணத்தில் உள்ளனர். அவர்களை போற்றும் விதமாக 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது. அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பங்கெடுக்க வேண்டும் என்ற கருத்து வலுப்பெற வேண்டும். மாணவர்கள் தங்கள் திறனை வாய்ப்பு கிடைக்கும்போது வெளிப்படுத்த வேண்டும். அப்போது தான் உயர்கல்வி பயில்வதற்கும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும்போதும் பயன்படும்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு-புதுவை-அந்தமான் மாநிலங்களுக்கான கள அலுவலக மண்டல இயக்குநர் காமராஜ் பேசுகையில், நோக்கம் பெரிதாக இருந்தால் இந்திய குடிமைப் பணி போன்ற தேர்வுகளில் வெற்றி பெறுவது எளிது. நம் வாழ்வு எவ்வாறு பிறருக்கு பயன்படும் என்ற சிந்தனையுடன் செயல்பட்டால் போட்டி தேர்வில் வெற்றி பெற முடியும். அதுவும் மாணவப் பருவத்தில் இந்த சிந்தனையை வளர்த்துக் கொண்டு செயல்பட வேண்டியது முக்கியம்.

இன்றைய தகவல் தொடர்பு உள்ளிட்ட அறிவியல் வளர்ச்சிகள் எதுவும் இல்லாத காலத்தில், அடிமையாக உள்ள என் நாட்டை விடுவிக்க என்ன செய்ய வேண்டும் என சிந்தித்து தீவிரமாக செயல்பட்டவர்கள் இன்று வரலாறாக, பேசப்படும் ஆளுமைகளாக உயர்ந்திருக்கின்றனர். நீங்களும் இப்போதே நிதானித்து, வாழ்க்கைக்கான பாதையை நிர்மானித்துக் கொள்ளுங்கள். எண்ணங்கள் வலுப்பட்டால் வெற்றி வசப்படும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் இந்திய சுதந்திர போராட்ட வரலாறு தொடர்பான பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப் போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், கள விழிப்புணர்வு அலுவலர்கள் வித்யா, நாத், பென்னாகரம் அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் செல்வநாயகம், கள விளம்பர உதவியாளர் வீரமணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories: