ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 3 மணிநேரத்தில் 187 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றி சாதனை

* சுவிட்சர்லாந்தின் உலக சாதனை முறியடிப்பு

* கலெக்டரிடம் 4 சான்றுகள் வழங்கப்பட்டது

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 3 மணிநேரத்தில் 187 மெட்ரிக் டன் பிளாஸ்டிக்குகள் அகற்றப்பட்டு சுவிட்சர்லாந்தின் உலக சாதனை முறியடிக்கப்பட்டது. இதையடுத்து 4 சாதனை நிறுவனங்கள் கலெக்டர் பாஸ்கரபாண்டியனிடம் சாதனைக்கான சான்றிதழ்களை வழங்கின.2,500 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை 3 மணிநேரத்தில் அகற்றும் உலக சாதனைக்கான நிகழ்ச்சியை, சிறு மலர் மடம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று தொடங்கி வைத்து பங்கேற்றார்.

இதில் கின்னஸ் சாதனை தமிழக துணை மேலாளர் மனோபாரத்(இந்திய ரெகார்ட்ஸ் அகாடமி), மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் லோகநாயகி, ஆர்டிஓ பூங்கொடி, நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத்தலைவர் ரமேஷ் கர்ணா, நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், வாலாஜா தாசில்தார் ஆனந்தன், கலெக்டரின் மனைவி கவிதா பாஸ்கரபாண்டியன்,  ராணிப்பேட்டை பொது தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் தலைவர் பி.ஆர்.சி.ரமேஷ் பிரசாத், நகராட்சி தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர் பாத்திமா, நகராட்சி துப்புரவு அலுவலர் அப்துல்ரஹீம், ஆய்வாளர் தேவிபாலா, நகராட்சி கவுன்சிலர்கள் நரேஷ் குமார், சங்கீதா, அசேன் ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் பல்வேறு துறை அதிகாரிகள், ஊழியர்கள் முன்னிலையில் நகராட்சி அலுவலகம் அருகில் பல்வேறு தெருக்களில் உள்ள வீடுகளில் உள்ள பொதுமக்களிடமிருந்து குப்பைகள் பெற்றுக்கொள்ளப்பட்டது.தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று முத்துக்கடையில் இருந்து வாகனங்களில் ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா நகராட்சிகளுக்கு உட்பட்ட வார்டுகளுக்கு பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள 6 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 288 ஊராட்சிகளில் உள்ள அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள், தூய்மைப்பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு மாவட்டத்தில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.நேற்று காலை 7 மணி முதல் 10 மணிவரை 3 மணிநேரத்தில் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே தேங்கியிருந்த பிளாஸ்டிக் குப்பைகள், வீடுகள் மற்றும் கடைகளில் பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகள் உள்ளிட்டவை 6 இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு எடை போடப்பட்டது. இதில் 186.914 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் குப்பைகள் இருந்தது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘இதற்கு முன்பு சுவிட்சர்லாந்து நாட்டில் 3 மணிநேரத்தில் 128 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டதே உலக சாதனையாக இருந்தது. தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 மணிநேரத்தில் 186.914 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

இந்நிலையில் இந்த புதிய முயற்சியை பாராட்டி ‘எலைட் வோர்ல்டு ரெக்கார்ட்ஸ்’ என்ற உலக சாதனை நிறுவனத்தின் சீனியர் தீர்ப்பாளர் அமீத் கே.ஹிங்க்ரோனி, ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி நிறுவனத்தின் சீனியர் தீர்ப்பாளர்கள் டாக்டர் ஏ.கே.செந்தில்குமார், சிவக்குமரன், தீர்ப்பாளர் எம்.சாந்தாராம், இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி நிறுவனத்தின் அசோசியேட் எடிட்டர் மற்றும் மூத்த சாதனை பதிவு மேலாளர்கள் பி.ஜெகன்நாதன், எஸ்.யஷ்வந்த் சாய், அசிஸ்டண்ட் ரெக்கார்ட்ஸ் மேனேஜர் கே.ஆர்.வெங்கடேஸ்வரன், தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் மூத்தப்பதிவு மேலாளர் எல்.ராஜ்கிருஷ்ணா, பதிவுமேளாளர் பா.பாலசுப்ரமணியன் என 4 உலக சாதனை நிறுவனங்களை சேர்ந்தவர்கள் நேரில் ஆய்வு செய்து, உலக சாதனை சான்றிதழ்களை கலெக்டர் பாஸ்கரபாண்டியனிடம் வழங்கி கவுரவித்தார்கள். மேலும் ஒத்துழைப்பு கொடுத்த அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் கலெக்டர் நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories: