குழித்துறை நகராட்சியில் மழைநீர் வடிகாலில் இணைந்த வீடுகளின் கழிவுநீர் குழாய் அடைப்பு

மார்த்தாண்டம் : கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் உள்ள கழிவுநீர் ரோட்டில் உள்ள ஓடைகளில் விடப்பட்டு வருகிறது. இந்த கழிவுநீர் நேரடியாக ஆறுகளிலும், குளங்களிலும் சென்று கலக்கிறது. இதனால் நீர்நிலைகள் மாசுபடுகிறது. இந்த நீர்நிலைகளில் நூற்றுக்கணக்கான குடிநீர் கிணறுகள் உள்ளது.இதனால் சுத்தமான குடிநீர் என்பது கேள்விக்குறியாக மாறி வருகிறது.

இதனால் மழைநீர் வடிகால் ஓடைகளில் வீடுகளில் உள்ள கழிவுநீர் கலப்பதால் ஏற்படும் பாதிப்புகள், சுகாதார சீர்கேடுகள் குறித்து உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த கலெக்டர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து குழித்துறை நகராட்சி பகுதியில் சுமார் 4 மாதத்திற்கு முன் நகராட்சி சார்பில் வீடு வீடாக எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுக்கப்பட்டது. வீடுகளின்  உள்ள கழிவு நீரை வீடுகளின் ஓரங்களில் குழி தோண்டி அதில் விட வேண்டும். மழைநீர் ஓடைகளில் விடக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.

 ஆனால் பொதுமக்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. தற்போது குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராமதிலகம்  அறிவுரையின் பேரில் நேற்று மார்த்தாண்டம் பகுதியில் முதல்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி மார்த்தாண்டம் கொடுங்குளம்  அட்டைகுளம் பகுதியில் ஒருவழிப் பாதையில் மழைநீர் ஓடைகளில் விடப்பட்ட 25 வீடுகளின் கழிவு நீர் குழாய்கள் சிமெண்ட் மற்றும்  சிமெண்ட் சாக்கு மூலம் அடைக்கப்பட்டது.

நகராட்சி சுகாதார அலுவலர் ஸ்டான்லி குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர் குருசாமி  மற்றும் ஏராளமான ஊழியர்கள்  நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த பணி நகராட்சி பகுதி முழுவதும் தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: