அரியானா முன்னாள் முதல்வர் சவுதாலாவுக்கு 4 ஆண்டு சிறை: சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு

புதுடெல்லி: சொத்துக் குவிப்பு வழக்கில் அரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலாவிற்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் தலைவரான இவர்,  கடந்த 1999ம் ஆண்டு முதல் 2004 வரை அரியானா மாநில முதல்வராக பதவி வகித்தார். அப்போது, தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து வருமானத்துக்கு அதிகமாக ரூ.6.10 கோடி சொத்து குவித்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பு அளித்தது. அதில், ஓம் பிரகாஷ் சவுதாலா உள்ளிட்டோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

இதையடுத்து, மேற்கண்ட வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்களை டெல்லி சிறப்பு நீதிமன்றம் நேற்று அறிவித்தது. அதில், சவுதாலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.  இதைத் தவிர, இவருக்கு சொந்தமான 4 சொத்துக்களை பறிமுதல் செய்யும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: