சிசு உயிரிழப்பை பூஜ்யநிலைக்கு கொண்டுவர வலியுறுத்தல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தனியார் பங்களிப்பில் ₹45 லட்சம் மதிப்பில் குழந்தைகளின் முதல் 1000 வாழ்நாட்கள் குறித்து ஊட்டச்சத்து பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு கர்ப்பிணி பெண்கள் நடைபயிற்சி மேற்கொள்ளலாம். மேலும், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளது. இந்த ஊட்டச்சத்து பூங்காவை இன்று காலை தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்று ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர். மேலும், ₹1 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்படும் பயணிகள் தங்கும் விடுதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவிலேயே முதன்முறையாக தாயின் கருவறை போன்று இங்கு பூங்கா வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும் குழந்தைகள் 1000 நாட்களில் எப்படி இருப்பதை பொதுமக்களுக்கு சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவர் சௌமியா சாமிநாதன் அறிவுறுத்தலின்படி இப்பூங்கா உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் பழங்கள், காய்கறிகள், கீரை வகைகள் வளர்க்கப்பட உள்ளது.

தமிழகத்தில் மாதத்துக்கு 75 முதல் 83 ஆயிரம் வரை குழந்தைகள் பிறக்கின்றன.

இதில் 60 சதவீத பெண்கள் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். மேலும், தமிழகத்தில் 75 சதவீதம் வரை மகப்பேறு சேவையை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறைவான சிசு உயிரிழப்பில் தமிழகம் 2வது இடத்தில் இருப்பதாகவும், ஆயிரத்தில் 13 குழந்தைகள் மட்டுமே உயிரிழப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சிசு உயிரிழப்பை பூஜ்ய நிலைக்கு கொண்டுவர டாக்டர்களிடம் அறிவுறுத்தி வருகிறேன். அதற்கான அறிவுறுத்தலும் வழங்கப்படுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Related Stories: