பயணிகள் நடந்துகூட செல்லமுடியாமல் அவதி: பார்க்கிங் இடமாக மாறிய வேலூர் பழைய பஸ் நிலையம்; நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வேலூர்: வேலூர் பழைய பஸ்நிலையம் பார்க்கிங் இடமாக மாறியுள்ளதால் பயணிகள் நடந்து செல்லக்கூட முடியாமல் அவதிப்படுகின்றனர். வேலூர் புதிய பஸ் நிலையம் தற்போது நவீன முறையில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக பழைய பஸ்நிலையம், மக்கான் அருகே தற்காலிக பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம் ஒரு பகுதி பஸ்நிலையமாக செயல்பட்டு வருகிறது. பழைய பஸ்நிலையத்திற்கு பெரும்பாலான பஸ்கள் வந்து செல்வதால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வேலூர் பழைய பஸ் நிலையத்துக்கு அருகில் பைக் பார்க்கிங் செயல்பட்டு வருகிறது. ஒரு பைக்கை நிறுத்திவிட்டுச் செல்ல அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் ஆரணி, திருவண்ணாமலை, விழுப்புரம்மற்றும் ஒடுகத்தூர், அணைக்கட்டு உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தம் இடத்தில் பைக்குகள், சரக்கு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த இடம் பார்க்கிங் பகுதியாகவே மாறியுள்ளது. இதனால் பயணிகள் நடந்து செல்லக்கூட முடியாமல் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் இப்பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது, பஸ் நிலையம் மற்றும் நினைவு தூண் அருகே வாகனங்களை நிறுத்தக்கூடாது. மீறி நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். மேலும் அந்த பகுதியில் பேரிகார்டுகள் வைத்து போக்குவரத்து காவலர்கள் கண்காணிக்கும் பணியிலும் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் மீண்டும் பஸ் நிலையம் ஆக்கிரமித்து பார்க்கிங் இடமாக மாறி உள்ளது. எனவே ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும். இனி இவ்வாறு நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: