2 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கிய ஏற்காடு மலர் கண்காட்சி: சுற்றுலா பயணிகளை வசீகரித்த பூக்களின் வடிவமைப்புகள்

சேலம்: 5 லட்சம் வண்ண மலர்களை கொண்டு விதவிதமாக உருவாக்கப்பட்ட கலை படைப்புகளுடன் ஏற்காடு மலர் கண்காட்சி உற்சாகமாக தொடங்கியுள்ளது. ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாத இறுதியில் கோடை விழா நடைபெறுவது வழக்கம். கொரோனா பரவலால் 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த கோடை விழா, இந்த ஆண்டு கோலாகலமாக தொடங்கியது.

ஜூன் 1-ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெறும் கோடை விழாவை முன்னிட்டு அண்ணா பூங்காவில் லட்சக்கணக்கான பூக்களை கொண்டு விதவிதமான வடிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 75 ஆயிரம் வெள்ளை மற்றும் சிவப்பு வண்ண மலர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள மாவட்டத்தின் அடையாளமான மேட்டூர் அணை அனைவரையும் கவர்ந்தது.

தமிழக அரசின் பெண்களுக்கான இலவச பேருந்து பயணதிட்டத்தை பெருமைப்படுத்தும் விதத்தில் 80 ஆயிரம் வெள்ளை, சிவப்பு மற்றும் மஞ்சள் ரோஜாக்களால் வடிவமைக்கப்பட்ட பேருந்து பெண்களை வெகுவாக வசீகரித்தது. 40 ஆயிரம் ரோஜாக்களால் ஆன மாட்டுவண்டி, 25 ஆயிரம் பூக்களால் ஆன வண்ணத்துப்பூச்சி, வள்ளுவர்கோட்டம், மஞ்சப்பை வடிவமைப்புகளை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

வித்தியாசமான படைப்புகளின் முன்னாள் நின்று பலர் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். அரியவகை பூக்களுடன் அணிவகுத்த 10 ஆயிரம் மலர்த்தொட்டிகள், காய்கறிகளால் உருவாக்கப்பட்ட காய்கனி கலை பொருட்களும் சுற்றுலா பயணிகளை வியப்பில்ஆழ்த்தியது.                 

Related Stories: