சென்னை பாஜக நிர்வாகி பாலச்சந்தர் படுகொலை: சேலம் எடப்பாடியில் பதுங்கி இருந்த 4 ரவுடிகள் அதிரடி கைது!

சேலம்: சென்னை பாஜக நிர்வாகி பாலச்சந்தர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சேலம் எடப்பாடியில் பதுங்கி இருந்த பிரதீப் உள்ளிட்ட 4 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.சென்னை சிந்தாதிரிப்பேட்டை முக்கியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலசந்தர் (30), பாஜ எஸ்சி பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவராக பதவி வகித்து வந்தார். இவர் மீது 2 கொலை முயற்சி உள்பட 6 வழக்குகள் உள்ளன.

நேற்று முன்தினம் இரவு சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கன் தெருவில் நண்பர் கலைவாணனுடன் ஒரு கடையின் அருகே நின்றிருந்தபோது, திடீரென வந்த 3 பேர் பாலசந்தரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு பைக்கில் தப்பினர். சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விரைந்து வந்து பாலசந்தர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், பாலசந்தர் கொலை குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

இந்த கொலையை சிந்தாதிரிப்பேட்டை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி தர்கா மோகனின் மகன்கள் பிரதீப் மற்றும் சஞ்சய் ஆகியோர் கூட்டாளியுடன் சேர்ந்து செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை பிடிக்க துணை கமிஷனர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தேடுதலின் போது பிரதீப்பும் அவரது கூட்டாளிகளும் சேலம் மாவட்டம் எடப்பாடியில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்தன. இதனையடுத்து அந்த இடத்தை சுற்றி வளைத்த போலீசார் பிரதீப், சஞ்சய், ஜோதி, கலைவாணன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

Related Stories: