மேலும் ஒரு பொதுத்துறை நிறுவனம் தனியார்மயம் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் மீதமுள்ள 29.5% பங்கும் விற்பனை: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் மீதமுள்ள 29.5 சதவீத பங்குகளையும் விற்க ஒன்றிய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. எல்ஐசி போன்ற பொதுத்துறை நிறுவனத்தை தனியாருக்கு தாரைவார்த்து வரும் நிலையில், மேலும் ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் 100 சதவீத பங்கையும் விற்க ஒன்றிய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில், ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தில் அரசுக்கு மீதமுள்ள 29.5 சதவீத பங்கையும் விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு ₹38 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும். இது, நடப்பு நிதியாண்டில் பொதுத்துறை பங்கு விற்பனை மூலம் ₹65,000 கோடி நிதி திரட்டும் ஒன்றிய அரசின் இலக்கையும் எட்ட உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.

கடந்த 2002ம் ஆண்டு வரை ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் 100 சதவீத பங்கை ஒன்றிய அரசு வைத்திருந்தது. பின்னர், அதில் 26 சதவீத பங்குகள் ₹445 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டன. இதை வேதாந்தா குழுமம் வாங்கியது. தற்போது ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் 64.92 சதவீத பங்கை வேதாந்தா நிறுவனம் சொந்தமாக்கி உள்ளது. இதில், ஒன்றிய அரசு வசமுள்ள 29.5 சதவீத பங்கையும் தற்போது விற்க உள்ளதால், மொத்த நிறுவனமும் ஒன்றிய அரசின் கையை விட்டு போக உள்ளது.

Related Stories: