கட்டுமானப் பணிகள் நிறைவு; உலகத் தரத்தில் கீழடியில் அகழ் வைப்பகம்: விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

திருப்புவனம்: கீழடியில் உலகத் தரத்தில் அகழ் வைப்பகம் கட்டப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள்  முடிவடைந்துள்ள நிலையில், அகழ் வைப்பகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களிலும் 8ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருள்களை காட்சிப்படுத்துவதற்காக கொந்தகை வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட பகுதியில் ரூ.11.03 கோடியில் அகழ் வைப்பகம் கட்டும் பணி துவங்கியது.

உலகத் தரத்தில் நவீன வசதிகளுடன் 31,919 சதுரஅடி பரப்பளவில் அமைக்கப்படும் இந்த அகழ் வைப்பகத்தில் நிர்வாக கட்டிடம், கல் தொல்பொருள் காட்சிக்கூடம், உலோக தொல்பொருள் காட்சிக் கூடம், திறந்தவெளி அரங்கம், மணிகள் மற்றும் தொல்பொருட்கள் காட்சிக் கூடம், விலங்குகள் குறித்த தொல்பொருள் காட்சிக் கூடம், சுடுமண் பானைகள் தொல்பொருள் காட்சிக் கூடம் என தனித்தனியே தயாராகி வந்தது. கடந்த மார்ச் மாதம் கீழடிக்கு வந்த தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, மே 31ம் தேதிக்குள் அகழ் வைப்பகத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் என தெரிவித்திருந்தார்.

தற்போது கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து விட்டன. சிறு, சிறு பணிகள் மட்டும் உள்ளன. இதுவும் விரைவில் முடிந்துவிடும். அடுத்த மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் சமத்துவபுரம் திறப்பு விழா உட்பட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை வழங்குவதற்காக வருகை தரவுள்ளார். அப்போது உலகத்தரத்திலான கீழடி அகழ் வைப்பகத்தையும் திறந்து வைப்பார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: