திருவானைக்காவல் கோயில் யானை அகிலாவுக்கு 20 வது பிறந்த நாள்-பிடித்த உணவு அளித்து கஜபூஜை

திருச்சி : திருவானைக்காவல் கோயில் யானை அகிலாவுக்கு 20 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.பஞ்சபூத தலங்களில் நீர் ஸ்தலமானது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோயில். இங்கு அகிலா என்ற யானை இறைப்பணியாற்றி வருகிறது. காலையில் சுவாமி, அம்பாள் திருமஞ்சன அபிஷேகத்துக்கு புனித நீர் எடுத்து வருவது, மதியம் உச்சிகால பூஜை மற்றும் சுவாமி தங்கரத புறப்பாடு உள்ளிட்ட உற்சவங்களில் யானை அகிலா ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

அகிலாவுக்காக கோயில் நந்தவனத்தில் நடைபாதை, பிரத்யேக நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைப்படி நீச்சல் குளம் அருகே யானை அகிலா சேற்று மண்ணில் குளிப்பதற்காக 1200 சதுர அடியில் பள்ளம் அமைக்கப்பட்டுள்ளது. சேறும், சகதியுமாக உள்ள இதில் யானை அகிலா தினமும் ஆனந்த சேற்று குளியல் ஆடுகிறது. இந்நிலையில் 20 வயதான யானை அகிலாவுக்கு நேற்று பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பக்தர்கள் அகிலாவுக்கு உணவு வழங்கி மகிழ்ந்தனர்.

இதுகுறித்து பாகன் ஜெம்புநாதன் கூறியதாவது: யானை அகிலா 24-5-2002ல் அசாம் மாநிலத்தில் பிறந்தது. கடந்த 6-12-2011ல் திருக்கோஷ்டியூர் சவுமி நாராயண டிரஸ்ட் சார்பில் திருவானைக்காவல் கோயிலுக்கு வழங்கப்பட்டது. 11 ஆண்டுகளாக அகிலா யானை திருவானைக்காவலில் பூஜைகளில் பங்கேற்று சுவாமிக்கு இறைபணியாற்றி வருகிறது. இன்று (நேற்று) பிறந்த நாளையொட்டி அகிலாவை குளிப்பாட்டி அலங்கரிக்கப்பட்டது. உற்சாகத்துடன் உள்ள அகிலாவுக்கு மாலை கஜபூஜை நடத்தி, பிடித்த உணவுகள் வழங்கப்பட்டது என்றார்.

Related Stories: