நீலகிரி மாவட்டத்தில் வனப்பரப்பை அதிகரிக்க பசுமைக்குழு கூட்டம்-வனத்துறை அமைச்சர் பங்கேற்பு

ஊட்டி : ஊட்டி தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் வனத்துறை சார்பில் மாவட்ட அளவிலான பசுமைக்குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், தமிழக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் கலந்து கொண்டு பேசியதாவது:தமிழக முதல்வர் சுற்றுச்சூழலை பாதுகாத்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மாநிலத்தில் வனப்பகுதியின் அளவினை உயர்த்திட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். அந்த வகையில் மாவட்டங்கள் தோறும் பல்வேறு மரங்களை வளர்த்து இயற்கையை பாதுகாத்திட நாம் அனைவரும் ஒன்றாக செயல் ஆற்றிட வேண்டும்.

மேலும், மரங்கள் வளர்ப்பதினால் இயற்கையாகவே ஆக்சிஜன் உற்பத்தி நடைபெற்று, போதுமான ஆக்சிஜன் கிடைக்கும். சுற்றுச்சூழலில் உள்ள கார்பன்டை ஆக்சைடு மரங்கள் உட்கொள்வதால் அதிக மழைப்பொழிவு ஏற்படுகிறது. இதனால், நிலத்தடி நீர் மட்டமும் உயரும்.தமிழக முதல்வர், வனப்பகுதியினை 33 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், நமது மாவட்டத்தில் காடுகளின் பரப்பளவை அதிகரிக்க வருவாய்த்துறை, வனத்துறை,  பொதுப்பணித்துறை, தோட்டக்கலைத்துறை, நகராட்சிகள், பேரூராட்சிகள், இந்து சமய அறநிலையத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறையினர் தங்கள் அலுவலகம் மற்றும் துறைக்குட்பட்ட இடங்களில் வன பரப்பளவை உயர்த்திட காலியிடம் எவ்வளவு உள்ளது என்பதினை கண்டறிய வேண்டும்.

மேலும், ஜூன் மாதம் 10ம் தேதிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து இத்திட்டத்தினை வெற்றிக்கரமாக செயல்படுத்த வேண்டும். நீலகிரி மாவட்டம் முன் உதாரண மாவட்டமாக திகழ அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் சச்சின் போஸ்லே துக்காராம், குன்னூர் சப் கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணகண்ணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மோகன் நவாஸ், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் (பொ) ஷிபிலா மேரி உட்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: