அமெரிக்காவில் தொடரும் பயங்கரம்: பள்ளிக்குள் புகுந்து கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு: 18 குழந்தைகள் உட்பட 21 பேர் பலி

வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் இளைஞர் ஒருவர் 18 பள்ளி குழந்தைகள் உட்பட 21 பேரை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் சான் அன்டோனியோவிற்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டேயில் உள்ள ராப் என்ற தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்று முற்பகல் அங்கு வகுப்புகள் நடந்து கொண்டு இருந்தபோது, பள்ளிக்குள் நுழைந்த 18 வயது இளைஞர் ஒருவர் திடீரென அங்கு இருந்த மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டான்.

உடனடியாக பள்ளி ஆசிரியர்களும் பிற ஊழியர்களும் அவரை பிடிக்க முயன்ற போது, அவர்கள் மீதும் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த டெக்சாஸ் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞரை சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் குறித்து பேசிய டெக்சாஸ் ஆளுநர் கிரேக் அபாட், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உவால்டேயில் வசிக்கும் 18 வயதான இளைஞர் சால்வடார் ராமோஸ் ஆவார்.அவர் தனது வாகனத்தை பள்ளியின் வெளியே நிறுத்திவிட்டு ராப் தொடக்கப் பள்ளிக்குள் கைதுப்பாக்கியுடன் நுழைந்துள்ளார்.

அவர் ஒன்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை வைத்து இருந்ததாகவும் தெரிகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டில் பள்ளி வளாகத்திலேயே 14 மாணவர்கள் கொல்லப்பட்டனர். ஆசிரியர்கள் சிலரும் உயிரிழந்தனர்.துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞர் ராமோஸ் காவல்துறையின் பதில் தாக்குதலால் கொல்லப்பட்டான்,என்றார். இந்த துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 18 குழந்தைகளும் 3 ஆசிரியர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.படுகாயம் அடைந்த 8 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் குறித்து டெக்சாஸ் காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று சூரிய அஸ்தமனம் வரை வெள்ளை மாளிகை மற்றும் பிற பொது கட்டிடங்களில் அமெரிக்கக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Related Stories: