மழையால் விற்பனை சரிவு அறுவடை செய்யாமல் வயல்களிலேயே கிர்ணி பழத்தை விட்டு செல்லும் அவலம்: சீர்காழி விவசாயிகள் கவலை

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவாலி, கோட்டகம், மண்டபம் திருநகரி, புதுத்துறை, காரைமேடு கிராமங்களில் 40 ஏக்கரில் கிர்ணி பழ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கிர்ணி பழங்களில் வைட்டமின் ஏ, ஈ, சி, பீட்டா கரோட்டின், பொட்டாசியம், மாங்கனீஸ் நிறைந்துள்ளன. இவை உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. கிர்ணி பழத்தில் பீட்டா கரோட்டின் சத்து நிறைந்துள்ளதால் பார்வை குறைவு ஏற்படுவதை கட்டுப்படுத்துகிறது.

கோடை காலங்களில் கிர்ணி பழம் அதிகளவில் விற்பனையாகும். இந்தாண்டு கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் இளநீர், தர்பூசணி, கிர்ணி பழ விற்பனை அதிகமாக இருந்தது. அக்னி நட்சத்திரம் துவங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று நினைத்திருந்த வேளையில் ஒரு மாதமாக தமிழகத்தில் பரவலாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் இளநீர், தர்பூசணி, கிர்ணி பழ விற்பனை சரிந்தது. கடந்த காலங்களில் கிர்ணி பழம் கிலோ ரூ.10 முதல் ரூ.12 வரை விற்பனையானது. இந்த (மே) மாதத்தில் கிலோ ரூ.6க்கும் குறைவாகவே விற்பனையாகிறது. இதனால் சீர்காழியில் அறுவடை செய்யப்படும் கிர்ணி பழங்களை வாங்குவதற்கு வியாபாரிகள் முன்வரவில்லை. விளைந்த கிர்ணி பழங்கள் விற்பனையாகாமல் வயலிலேயே அறுவடை செய்யப்படாமல் உள்ளது. கிர்ணி பழம் விற்பனையாகாததால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: