கோவில்பட்டியிலிருந்து கேரளாவுக்கு கடத்த இருந்த 5 டன் ரேஷன் அரிசி, மாவு பறிமுதல்

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலிருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக எஸ்.பி. பாலாஜி சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் கோவில்பட்டி கிழக்கு இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் தலைமையில் எஸ்ஐக்கள் தர்மராஜ், மாதவராஜ் மற்றும் போலீசார் பூரணம்மாள் காலனியில் உள்ள ரைஸ் மில்லில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஒரு டன் ரேஷன் அரிசி மூடைகளாகவும், மாவாகவும் வைக்கப்பட்டு, கேரளாவுக்கு லாரியில் ஏற்ற தயார் நிலையில் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த ஒரு டன் ரேஷன் அரிசி மற்றும் மாவு மூடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.இதனை கடத்த முயன்ற கோவில்பட்டி, பூரணம்மாள் காலனியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் சிவா (25), அதே ஊர் வள்ளுவர் நகரைச் சேர்ந்த சின்ன கருப்பசாமி மகன் மகாராஜா (18), வடக்கு திட்டங்குளத்தைச் சேர்ந்த கன்னிச்சாமி மகன் மற்றொரு மகாராஜா (40) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இதேபோல் கோவில்பட்டி மேற்கு இன்ஸ்பெக்டர் கிங்ஸிலிதேவ்ஆனந்த் தலைமையில் எஸ்ஐ அரிகண்ணன் மற்றும் போலீசார், ஊரணி தெருவில் ஒரு குடோனில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 4 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கோவில்பட்டி, ஊரணி தெருவைச் சேர்ந்த முத்துமாரியப்பன் (31) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் மாவு மூடைகளை, தூத்துக்குடி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் கோவில்பட்டி போலீசார் ஒப்படைத்தனர். கோவில்பட்டியிலிருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: