32வது வார்டில் குடிநீர், அடிப்படை வசதிகள் கோரி பாளை. மண்டல அலுவலகத்தை காலி குடங்களுடன் காங்கிரசார் முற்றுகை

நெல்லை : நெல்லை மாநகராட்சி 32வது வார்டில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி பாளை. மண்டல அலுவலகத்தை காலி குடங்களுடன் காங்கிரசார் முற்றுகையிட்டனர். நெல்லை மாநகராட்சி 32வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி காங்கிரஸ் கட்சியினருடன் காலி குடங்களுடன் வந்த பெண்கள், வார்டு பொதுமக்கள் பாளை மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். 32வது வார்டு கவுன்சிலர் அனுராதா சங்கரபாண்டியன், மகளிரணி வாணி, மெட்டில்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தின்போது, நெல்லை மாநகராட்சி 32வது வார்டுக்கு உட்பட்ட ஜோதிபுரத்தில் எரிபத்தநாயனார் தெரு, எம்ஜிஆர் காலனி மற்றும் காரியநயினார் தெருக்களுக்கு செல்லும் குடிநீர் குழாய்களில் அடிக்கடி ஏற்படும் அடைப்பை சரிசெய்ய வேண்டும். புதுப்பேட்டை வடக்குத்தெரு, நடுத்தெரு, மேலத்தெரு பகுதிகளில் குடிநீர் பிரச்னையை போக்க, புதிய குடிநீர் குழாய்களை பதிக்க வேண்டும்.

32வது வார்டில் பழுதாகி கிடக்கும் சின்டெக்ஸ் தொட்டிகளை உடனே மாற்ற வேண்டும். பாளையங்கால்வாய் வழியாக நேசநயினார் தெருவிற்கு செல்லும் குடிநீர் குழாய் பழுதாகியுள்ளது. அதற்கு உயரமான கான்கிரீட் பாலம் அமைத்து குடிநீர் குழாய் செல்வதற்கு வழி செய்ய வேண்டும். 32வது வார்டு குடிநீர் பிரச்னையை நிரந்தரமாக தீர்க்க, ஜோதிபுரம் மைதானத்தில் மேல்நிலை  நீர்த்தேக்கத் தொட்டி கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. அதைத் ெதாடர்ந்து கோரிக்கைகளை பாளை மண்டல உதவி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷாவிடம், 32வது வார்டு  கவுன்சிலர் அனுராதா தலைமையில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

இதில் மாவட்ட பொதுச் செயலாளர் சொக்கலிங்ககுமார், பொருளாளர் ராஜேஷ்முருகன்,  மாவட்ட செயலாளர் குறிச்சி கிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர்கள் கவிபாண்டியன், வெள்ளப்பாண்டியன், மண்டல தலைவர்கள் பாளை மாரியப்பன், நெல்லை முகமது அனஸ்ராஜா, மேலப்பாளையம் ரசூல்மைதீன் மற்றும் ராஜேந்திரன், நெகமியா, ராமகிருஷ்ணன், சின்னப்பாண்டி, மகளிரணியைச் சேர்ந்த பெண்கள் உள்பட 32வது வார்டு மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: