குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கல்லூரி மாணவி கொலை: 2 இடங்களில் சாலை மறியல்

திருச்சி:திருச்சி அடுத்த திருவெறும்பூர் நொச்சி வயல் புதூரை சேர்ந்த 19 வயது மாணவி, தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். இவர், கடந்த 17ம் தேதி வயிற்றுவலி, உடல் சோர்வு காரணமாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில் மாணவியின் வயிற்றில் விஷம் கலந்திருப்பது உறுதியானது. இதுதொடர்பாக போலீசாரிடம் அந்த மாணவி அளித்த வாக்குமூலத்தில், என்னை காதலிப்பதாக கூறிய வாலிபரை செருப்பால் அடித்தேன். கடந்த 12ம் தேதி கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்தபோது, என்னை காதலிப்பதாக கூறிய நபர் உள்பட 3 வாலிபர்கள் சேர்ந்து வலுக்கட்டாயமாக இழுத்து சென்று அருகில் உள்ள ஒரு தெரு சந்தில் வைத்து விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்து குடிக்க செய்தனர் என வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து பாய்லர் ஆலை போலீசார் வழக்குப்பதிந்து 3 பேரை தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் அந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். குற்றவாளிகள் 3 பேரையும் கைது செய்யாவிட்டால் மாணவி உடலை வாங்க மாட்டோம் என்று கூறி திருவெறும்பூர் மலைக்கோயில் அருகே நேற்று காலை மாணவியின் உறவினர்கள், பொதுமக்கள் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தியதால் ஆத்திரமடைந்த மக்கள், போலீசார் மீது கற்களை வீசினர். இதனால் லேசான தடியடி நடத்தியதில் 4 பேர் காயம் அடைந்தனர். இதை கண்டித்து நொச்சிவயல் புதூரில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதற்கிடையே டிப்ளமோ மாணவர் கிஷோர் (19) என்பவர் மீது மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Related Stories: