நீடிக்கும் பொருளாதார நெருக்கடி!: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அமைச்சரவையில் புதிதாக 8 அமைச்சர்கள் பதவியேற்பு..!!

கொழும்பு:  இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே அமைச்சரவையில் புதிதாக 8 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே முன்னிலையில் 8 அமைச்சர்களும் பதவியேற்றனர். இலங்கையில் 2 மாதத்திற்கும் மேல் மக்களின் போராட்டம் நீடித்து வருகிறது. கடந்த 9ம் தேதி போராட்டக்காரர்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் கொழும்பு முழுவதும் வன்முறை பரவியது. தொடர்ந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். 4வது முறையாக இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றுள்ளார்.

இருப்பினும் அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலகக்கோரி போராட்டம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் விக்ரமசிங்கே அமைச்சரவையில் புதிதாக 8 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். அதன்படி, விவசாயம், வனவிலங்கு அமைச்சராக மஹிந்த அமரவீர பதவியேற்றுக் கொண்டார். ஊடகம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சராக பந்துல குணவர்தன, நீர்ப்பாசனம் மற்றும் நீர்வழங்கல் துறை அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல, கடற்தொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா பதவியேற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து, தொழில்துறை அமைச்சராக ரமேஷ் பத்திரண, புத்த சாசனம், சமயம் மற்றும் கலாச்சார விவகார அமைச்சராக விதுர விக்ரமநாயக்க, சுற்றாடல் துறை அமைச்சராக நஷீர் அஹமத், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சராக அநுருத்த ரணசிங்க பதவியேற்றுக் கொண்டனர். புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே அமைச்சரவையில் ஏற்கனவே 13 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டதை தொடர்ந்து தற்போது மேலும் 8 பேர்  பதவியேற்றுள்ளனர் என்பது நினைவுகூரத்தக்கது.

Related Stories: