செஞ்சி அருகே பரபரப்பு ஓபிஎஸ் விழாவில் பொருட்களை அள்ளிச் சென்ற அதிமுகவினர்: பீரோ, சீர்வரிசை பொருட்களுடன் ஓட்டம்

செஞ்சி: செஞ்சி அருகே நடந்த ஓபிஎஸ் பங்கேற்ற நலத்திட்ட விழாவில் அதிமுகவினர் சீர்வரிசை பொருட்களை கபளீகரம் செய்தனர். பீரோவை தூக்கி கொண்டு சிலர் ஓடினர். அண்டாவுக்குள்ளிருந்து பிரியாணியை அள்ளினர். ஒருவர் கையிலிருந்து மற்றொருவர் பொருட்களை பிடுங்கி கொண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. செஞ்சி அடுத்த செம்மேடு பகுதியில் தனியார் பெட்ரோல் பங்க் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள், திருமண சீர்வரிசை பொருட்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை சென்னையிலிருந்து செஞ்சிக்கு வந்தார்.

செஞ்சி சங்கராபரணி ஆற்றின் கரை அருகே ஏராளமான பெண்களை அழைத்து வந்து வரவேற்பு கொடுக்கப்பட்டது. செஞ்சி-திருவண்ணாமலை சாலையில் நலத்திட்ட உதவிகளை ஒரு சிலருக்கு மட்டும் ஓ.பன்னீர் செல்வம் வழங்கினார். பின்னர் ஆலம்பூண்டி, சத்தியமங்கலம், செம்மேடு ஆகிய பகுதிகளிலும் நலத்திட்ட உதவிகளை வழங்க சென்றார். விழாவில் எதுவும் பேசாமல் ஓ.பன்னீர்செல்வம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில், செம்மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த தென்னை மரக்கன்றுகள், குடம், போர்வை, துணிகள், தலையணை போன்ற பொருட்களை அங்கு திரண்டிருந்த அதிமுகவினர் திடீரென முண்டியடித்து மேடைக்கு சென்று அவரவர்களுக்கு வேண்டிய பொருட்களை அள்ளிச் சென்றனர். பீரோக்களை தூக்க முடியாமல் சிலர் தூக்கி கொண்டு ஓடினர்.

ஒரு பீரோவை தூக்கியவர் கரும்பு தோட்டத்துக்குள் சென்று பதுங்கினார். மேலும் ஒருவர் கையில் சிக்கிய பொருளை மற்றொருவர் பிடுங்கிக்கொண்டு தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். கூட்டத்துக்குள் பெண்களும், சிறுமிகளும் புகுந்து பொருட்களை எடுப்பதற்கு போட்டா போட்டி போட்டனர். வந்திருந்தவர்களுக்கு வழங்க அண்டாக்களில் தயார் செய்து வைத்திருந்த பிரியாணியை அப்படியே அள்ளிக்கொண்டு சென்றனர். இதனால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: