இயற்கை எரிவாயு இணைப்புக்கு சேலத்தில் குழாய் பதிப்பு தீவிரம்: விரைவில் வீடுகளுக்கு வழங்க முடிவு

சேலம்: சேலம் மாநகராட்சி பகுதியில் இயற்கை எரிவாயு விநியோக குழாய் பதிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில், வீடுகளுக்கு இணைப்பு கொடுக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். நாடு முழுவதும் காற்று மாசை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதிக மாசு ஏற்படுத்தும் வாகன எரிபொருள் உபயோகம், சமையலுக்கு எல்பிஜி காஸ் உபயோகம், நிலக்கரி, விறகு போன்ற திட எரிபொருள் உபயோகம் போன்றவற்றை குறைத்து இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்க திட்டங்களை தீட்டியுள்ளது. இதில், நிலத்திற்கு அடியில் இருந்து கிடைக்கும் இயற்கை எரிவாயுவை சேமித்து, வீட்டு காஸ் இணைப்பு, வாகன எரிபொருள், தொழிற்சாலை பயன்பாடு போன்றவற்றிற்கு பயன்படுத்தி காற்று மாசு அளவை வெகுவாக குறைத்திட நகர எரிவாயு விநியோக திட்டத்தை மத்திய அரசு கடந்த 2005ம் ஆண்டு அறிவித்தது.

இத்திட்டம், 2008ம் ஆண்டில் இருந்து செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் இத்திட்டத்தை மத்திய அரசு மாவட்ட வாரியாக செயல்படுத்துகிறது. தமிழகத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, சேலம், கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், திருப்பூர், திருச்சி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இயற்கை எரிவாயு விநியோக திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம், 3 லட்சம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு இணைப்பு வழங்க இத்திட்டப்பணியை கடந்த 2 ஆண்டுக்கு முன் தொடங்கியது. இரும்பாலை பகுதியில் முதலில் பணியை தொடங்கினர். தொடர்ந்து, மாநகராட்சி பகுதியில் 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு இயற்கை எரிவாயு விநியோக குழாயை பதித்தனர். தற்போது 2ம் கட்ட குழாய் பதிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சேலம் சங்கர்நகர் பகுதியில் வீடுகளுக்கு இணைப்பு வழங்கும் வகையில் இயற்கை எரிவாயு விநியோக குழாய் பதிக்கப்படுகிறது. இப்பணி கடந்த ஒரு வாரமாக அப்பகுதியில் நடக்கிறது. ஒவ்வொரு தெருவிலும் நவீன இயந்திரம் மூலம் ரோட்டை இரும்பு குழாய் கொண்டு குடைந்து, அதன்வழியே இயற்கை எரிவாயு விநியோக குழாயை பொருத்தி வருகின்றனர். இதேபோல், அழகாபுரம், சூரமங்கலம், அஸ்தம்பட்டி பகுதியிலும் இயற்கை எரிவாயு விநியோக குழாய் பதிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், ‘‘சேலம் மாநகராட்சி பகுதியில் 2ம் கட்டமாக இயற்கை எரிவாயு விநியோக குழாய் பதிக்கும் பணியை நடத்தி வருகிறோம்.

இதில், சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய் பதிக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. இரும்பாலை பகுதியில் பணிகள் முற்றிலும் முடிவடைந்து விட்டது. அங்கு முதலில் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு இணைப்பை வழங்கவுள்ளோம். சமையலுக்கு எவ்வளவு இயற்கை எரிவாயுவை பயன்படுத்துகிறோம் என்பது மீட்டரில் பதிவாகும். அதனைக்கொண்டு, மின்சார கட்டணம் போல் ஆன்லைன் மூலம் வசூலித்துக் கொள்வோம். அதற்கான ஏற்பாட்டை செய்து வருகிறோம். மாநகரில் மற்ற இடங்களில் பெரிய மற்றும் சிறிய விநியோக குழாய்கள் தொடர்ந்து பதிக்கப்பட்டு வருகிறது,’’ என்றனர்.

Related Stories: