சீர்காழி அருகே 10 நாளாக வயலில் சாய்ந்து கிடக்கும் மின் கம்பம்: மோட்டார்களை இயக்க முடியாமல் விவசாயிகள் கவலை

சீர்காழி: சீர்காழி அருகே கீழச்சாலை கிராமத்தில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு காற்றுடன் மழை பெய்த போது வயலில் இருந்த மின்கம்பம் முறிந்து கீழே விழுந்துள்ளது. இரவில் மின்கம்பம் விழுந்ததால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை மின்கம்பம் முறிந்து விழுந்ததையடுத்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் இயக்கப்படும் மின்மோட்டார்கள் இயக்க முடியாமல் இருந்து வருகிறது இதன் காரணமாக வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சல் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகளுக்கு கடும் இழப்பு ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. காற்றில் முறிந்து விழுந்த மின்கம்பத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மின்சார வாரிய அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில் மின் கம்பத்தை மாற்ற ஆகும் செலவு விவசாயிகள் வசூல் செய்து தர வேண்டுமென மின்சார வாரிய ஊழியர்கள் தெரிவித்ததாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். மின்கம்பத்தை மாற்ற விவசாயிகள் பணம் தராததால் கடந்த 10 நாட்களாக மின்கம்பம் மாற்றாமல் இருப்பதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

காற்றில் முறிந்து விழுந்த மின்கம்பத்தை மாற்ற விவசாயிகள் எப்படி பணம் தர முடியும் என்ற கேள்வியை விவசாயிகள் எழுப்பி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் முறிந்து விழுந்த மின் கம்பத்தை மாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகளிடம் பணம் கேட்ட ஊழியர்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: