கோடை மழையால் காய்கறி சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள்: தரமான விதைகளை வாங்க அறிவுரை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் அவ்வப்போது பெய்யும் கோடை மழையால், கிராமங்களில்  பயிர் சாகுபடி மேற்கொள்ள உழவு ஓட்டும் பணியில் விவசாயிகள் தீவிரமாக  இறங்கியுள்ளனர். பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் தென்மேற்கு  பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் விவசாயிகள் தங்கள் நிலங்களை  உழுது மானாவாரி பயிடும் பணியில் ஈடுபடுகின்றனர்.  கடந்த ஆண்டில் பெய்த  தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக்கு பிறகு, இந்த ஆண்டில் ஜனவரி மாதம்  இறுதியிலிருந்து சில மாதங்களாக மழை  இல்லாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த  சில வாரங்களாக சுற்றுவட்டார கிராமங்களில் அவ்வப்போது கோடை மழை பெய்தது.

இதைத்தொடர்ந்து விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில், காய்கறி மற்றும் மானாவாரி பயிர் சாகுபடி மேற்கொள்ள துவங்கியுள்ளனர். கேடை  மழை முன்கூட்டியே பெய்ததால் விளை நிலத்தில் ஈரப்பதம் அதிகரிப்பின்  காரணமாக, கிராமங்களில் பயிர்விதைப்பு மற்றும் காய்கறி சாகுபடியில்  விவசாயிகள் முன்கூட்டியே இறங்கியுள்ளனர்.  வேளாண் அதிகாரிகள்  கூறுகையில், ‘‘பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் பெய்யும் கோடை மழையால்,  பலர் மானாவாரி மற்றும் காய்கறி சாகுபடியில் ஈடுபடுகின்றனர். இந்த  சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சில வியாபாரிகள் தரமற்ற விதைகளை விவசாயிகளுக்கு  விற்க முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது.

ஆகவே விதைகளை வாங்கும்போது  விவசாயிகள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும். தெருக்களில் குவியலாக வைத்து  விற்கப்படும் விதைகளை எக்காரணம் கொண்டும் வாங்க வேண்டாம். விதை  விற்பனை உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் மட்டுமே விவசாயிகள் விதைகளை  வாங்க வேண்டும். அவ்வாறு விற்பனை நிலையங்களில் விதைகளை வாங்கும்போது விபர  அட்டைகள், பயிர் ரகம், குவியல் எண் மற்றும் காலாவதி தேதி ஆகியவற்றை  விவசாயிகள் கவனிக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: