ஓமலூர் பகுதியில் திடீர் ஆய்வு ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்-அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு

சேலம் : சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன்கடைகளிலும் தரமான அரிசி வழங்கப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என ஓமலூர் பகுதியில் ஆய்வு நடத்தி கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் பகுதி நேர மற்றும் முழு நேர ரேஷன்கடைகள் 1,601 இயங்குகிறது. பெரும்பாலான பொதுமக்கள், இந்த ரேஷன்கடைகளின் மூலமே அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை உள்ளிட்ட தங்களது அத்தியாவசிய பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஓமலூர் தாலுகாவில் வெள்ளாளப்பட்டி கூட்டுறவு ரேஷன்கடையில், கலெக்டர் கார்மேகம் நேற்று திடீர் ஆய்வு நடத்தினார். அதில், பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அரிசி, தரமானதாக உள்ளதா என பார்வையிட்டார்.

அரிசி, பருப்பு வாங்க வந்திருந்த மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். சரியான நேரத்தில் கடையை திறந்து பொருட்களை விநியோகம் செய்ய வேண்டும் என ஊழியர்களை அறிவுறுத்தினார். மேலும், ஒவ்வொரு ரேஷன்கடைகளிலும் தரமான அரிசி வழங்கப்படுகிறதா? என்பதை கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து உறுதி செய்யவேண்டும் என உத்தரவிட்டார்.

தொடர்ந்து, இ-சேவை மையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் கலெக்டர் கார்மேகம் ஆய்வு நடத்தினார். அதில், இ-சேவை மையங்களில் பிறப்புச்சான்று, முதல் பட்டதாரிக்கான சான்று, விவசாயச்சான்று, வருமானச்சான்று, வாரிசுச்சான்று, சொத்து மதிப்பு சான்று, கலப்பு திருமணச்சான்று, மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதிய திட்டம், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான சான்று, இறப்புச்சான்று உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்குவதை பொதுமக்களிடம் எடுத்துரைத்து பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும் என அலுவலர்களை கேட்டுக் கொண்டார். பின்னர், கருப்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு மருந்து, மாத்திரைகளின் இருப்பு, பிறப்பு சான்றுக்கான பதிவேடுகள், வெளிநோயாளிகளின் வருகை குறித்த பதிவேடுகளை பார்வையிட்டார். அப்போது, நாய்க்கடி, பாம்புக்கடி உள்ளிட்ட விஷ முறிவு மருந்துகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டுமென சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, ஓமலூர் தாசில்தார் வள்ளமுனியப்பன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: