வேடன்வயல் தட்ட கொல்லி காலனியில் தொடர் மழை மண்சரிவால் அந்தரத்தில் தொங்கும் வீடுகள்

கூடலூர்: கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. அந்தரத்தில் தொங்கும் வீடுகள் அருகே மண்சரிவு ஏற்படுவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.அரபிக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள புயல் மற்றும் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான காரணிகளால்  கூடலூர், பந்தலூர் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மண் இலகு தன்மையுள்ள இடங்களில் லேசான மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட வேடன் வயல் மற்றும் தட்ட கொல்லி காலனி குடியிருப்புகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 30 வருடங்களுக்கு முன்பு அரசு வழங்கிய இலவச வீட்டுமனைப்பட்டாவில் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

மலைப் பாங்கான பகுதியில் இந்த வீடுகள் கட்டப்பட்டு இருப்பதால் மழைக் காலங்களில் வீடுகளை ஒட்டி அடிக்கடி மண்சரிவு ஏற்பட்டு வீடுகள் அந்தரத்தில் தொங்குகின்றன. வேடன் வயல், தட்ட கொல்லி காலனியில் வசிக்கும் முத்து, வரதராஜன், ராமலிங்கம், ராம ஜெயம், சீதாலட்சுமி உள்ளிட்ட பலரின்  வீடுகளை ஒட்டி மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மண் சரிவில் இருந்து பாதுகாக்க பிளாஸ்டிக் கவர்களால் தரைகளை மூடி வைத்துள்ளனர். எனினும் அடுத்து வரும் தொடர் மழை காலங்களில் இப்பகுதியில் மேலும் மண் சரிவு ஏற்படும் ஆபத்து உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

வீடுகளை ஒட்டி மண் சரிவு ஏற்படாமல் தடுக்க தடுப்புச்சுவர் அமைத்து தர வேண்டும் என பல வருட காலமாக கோரிக்கை விடுத்தனர். கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இந்த பகுதியில் ஆய்வு செய்து இங்கு தடுப்புச்சுவர் கட்ட சாத்தியமில்லை என்று கூறிவிட்டதாக இந்த பகுதி மக்கள் கூறினர். தடுப்புச்சுவர் கட்ட சாத்தியமில்லை என்றால் பாதுகாப்பான வேறு திட்டங்களை செயல்படுத்துமாறு இந்த பகுதி மக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: