முதல்வருடன் அதிமுக எம்பி ரவீந்திரநாத் தனியாக சந்திப்பு: தொகுதி கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்

சென்னை: தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, அதிமுக எம்பி ரவீந்திரநாத் தனியாக சந்தித்து மனு அளித்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவில் போட்டியிட்ட வேட்பாளர்களில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மட்டுமே வெற்றி பெற்றார். இந்நிலையில், மாநில வளர்ச்சிக் குழுக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அனைத்து கட்சிகளின் எம்பிக்கள் கலந்து கொண்டனர்.

குறிப்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருவமாவளவன், காங்கிரஸ் எம்பி திருநாவுகரசர், அதிமுக எம்பி ஓ.பி. ரவீந்திரநாத் உட்பட பலரும் கலந்து கொண்டார். முதல்வர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்ததுமே, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது அலுவலகத்துக்கு சென்றுவிட்டார். இதன் பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது அலுவலகத்திலேயே சென்று, ஓ.பி.ரவீந்திரநாத் தனியாக சந்தித்து பேசினார்.

 அப்போது முதல்வரிடம் ஒரு மனு ஒன்றையும் கொடுத்தார். அந்த மனுவில், ‘‘நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் பல்வேறு வசதிகள் செய்து தர வேண்டும். இந்த மருத்துவமனையை நான் நேரில் சென்று பார்வையிட்டு குறைகளை கேட்டறிந்தேன். இந்த மருத்துவமனைக்கு உடனடி தேவையான மருத்துவ உபகரணங்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது. அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த மருத்துவமனையில் அடிப்படை தேவைகளை விரைவாக நிறைவேற்றி தர வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது.  

  மேலும், தேனி மக்களவை தொகுதிக்கான மற்ற கோரிக்கைகள் குறித்தும் அடங்கிய மனுவையும் முதல்வரிடம் அளித்தார். அப்போது, பாரதியார் கவிதைகள் புத்தகத்தை முதல்வருக்கு, அதிமுக எம்பி ரவீந்திரநாத் பரிசாக அளித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலினை அதிமுக  எம்பி ஓ.பி. ரவிந்திரநாத் தனியாக சந்தித்து மனு கொடுத்த சம்பவம் தலைமை செயலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: