கொடைக்கானலில் மலர் கண்காட்சியுடன் கோடைவிழா மே 24ல் துவக்கம்

திண்டுக்கல்: கொடைக்கானலில் கோடைவிழா மலர் கண்காட்சி மே 24ம் தேதி துவக்கப்படுகிறது என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.திண்டுக்கல் கலெக்டர் விசாகன் கூறியுள்ளதாவது:திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடைவிழா மற்றும் 59வது மலர் கண்காட்சி மே 24ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடத்தப்படுகிறது. கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெறும் இவ்விழாவில் மே 24ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை 6 நாட்கள் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சி, சுற்றுலாத்துறை சார்பில் கோடைவிழா மே 24ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. இவ்விழாவில் பல்வேறு பாரம்பரிய மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பாரம்பரிய வீர விளையாட்டுகள், படகு அலங்கார அணிவகுப்பு, மீன் பிடித்தல் போட்டி, நாய்கள் கண்காட்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

விழாவில் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகள் தொடர்பான விபரங்களுக்கு, சுற்றுலா அலுவலர், சுற்றுலா அலுவலகம், கொடைக்கானல் - 624101 என்ற முகவரியில் நேரிலோ, 04542-241675 என்ற அலுவலக தொலைபேசி எண் மற்றும் 91769 95868 என்ற செல்போன் எண் மற்றும் கொடைக்கானல் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநரை 90928 61549 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு தெரிவித்துள்ளார். கோடை விழாவையொட்டி, வாகன நெரிசலை தவிர்க்க கொடைக்கானல் ஏரியை சுற்றி ஒரு வழிப்பாதை முறை அமல்படுத்தப்பட்டு, நேற்றிலிருந்து கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏரியைச் சுற்றி இரண்டு பகுதிகளிலும் கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories: