20 லட்சம் லிட்டர் கழிவுநீர் கலப்பதால் கூவமாக மாறும் பரமக்குடி வைகை: பாதாள சாக்கடை திட்டம் அவசியம்

பரமக்குடி:  பரமக்குடி வழியாக செல்லும் வைகையாற்றில் தினமும் 20 லட்சம் லிட்டர் கழிவுநீர் கலப்பதால் படிப்படியாக கூவமாக மாறி வருகிறது. மதுரையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் வரும் வைகை ஆறு பரமக்குடி நகர் பகுதிக்குள் 7 கி.மீ தூரம் செல்கிறது. குடிநீர், விவசாய பாசனத்துக்கும் முக்கிய நீர் ஆதாரமாக இருக்கிறது. பரமக்குடி நகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் வைகையாறு, கடந்த பல ஆண்டுகளாக சரியான பராமரிப்பு, தூர்வாருதல், கண்காணிப்பு இல்லாமல் மாசடைந்து வருகிறது.

வைகையாற்றின் கரையோர பகுதிகளில் மது அருந்துபவர்கள் பாட்டிலை உடைத்து வீசுவதும், வீட்டு கழிவுகளை கொட்டியும் வருகின்றனர். மேலும், காலாவதியான மருத்துவ பொருள்களின் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. நள்ளிரவு பகுதிகளில் வாகனங்களில் கொண்டு வரப்படும் இறைச்சிக் கழிவுகள், பிளாஸ்டிக் பைகள், உணவு கழிவுகளும் கொட்டப்பட்டு வருகின்றன. மேலும், கரையோர மக்கள் ஆற்றில் மலம் கழிப்பதும், செப்டிக் டேங்க் கழிவு நீர் கலப்பதும் நடக்கிறது. இதுகுறித்து பொன்னையாபுரம் ராஜீவ் காந்தி கூறுகையில், தினமும் 20 லட்சம் லிட்டர் சாக்கடை நீர் கலப்பதால், பரமக்குடி வைகை தற்போது கூவம் போல மாறி வருகிறது.

இதனால், வைகை ஆற்றின் கரையோர குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்களில் தண்ணீர் மாசடைந்துள்ளது. கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வயிற்றுப்போக்கு மலேரியா உள்ளிட்ட பலவிதமான நோய்கள் அடிக்கடி ஏற்படுகிறது. வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த காலங்களில், வைகையாற்றில் பல இடங்களில் படித்துறைகள் இருந்தன. மரங்கள் நிறைந்த சோலையாக இருந்த இந்த படித்துறைகளில் மக்கள் நீராடி வந்தனர். தற்பொழுது அந்த படித்துறைகள் மண் மூடி இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது.

ஆற்றில் சிறிய ஓடை போல் சாக்கடை நீர் மட்டுமே ஓடுகிறது. பருவமழை காலங்களில் மட்டும் வைகை ஆற்றில் தண்ணீர் ஓடும். மற்ற காலங்களில் பெரும்பாலும் வைகையாறு வறண்டு காணப்படுகின்றது. வைகை ஆறு மாசுபடுவதை தடுக்காவிட்டால், இன்னும் 5 ஆண்டுகளில் பரமக்குடி நிலத்தடி நீர் வறண்டு கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் வந்துவிடும். ஒட்டுமொத்த மக்களுக்கு அன்றாட தேவைகளுக்கு தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. வைகை ஆற்றை பாதுகாக்க பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவர நகராட்சி தீவிரம் காட்ட வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: