நிபந்தனைகளுக்கு உட்பட்ட தற்காலிக நியமனங்களை ஏற்றவர்கள் பணி வரன்முறை கோர முடியாது: கவுரவ விரிவுரையாளர்களின் மனு தள்ளுபடி

மதுரை: நிபந்தனைகளுக்குட்பட்ட தற்காலிக நியமனங்களை ஏற்றவர்கள், பணி வரன்முறை கோர முடியாது என கூறியுள்ள ஐகோர்ட் கிளை, வரன்முறை செய்யக் கோரிய கவுரவ விரிவுரையாளர்களின் மனுக்களை தள்ளுபடி செய்தது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு கலைக்கல்லூரியில் கணினி பிரிவில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றும் செந்தில்குமார், தனது பணிக்கு எந்த விதத்திலும் இடையூறு செய்யக் கூடாது என்றும், தனது பணியை வரன்முறை செய்து, உரிய பணப்பலன்களை வழங்கக் கோரியும் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இதேபோல், மேலும் பலர் மனு செய்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்கள் அனைவரும் குறிப்பிட்ட காலத்திற்கு தற்காலிகமாக கவுரவ விரிவுரையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது தங்களது பணியை வரன்முறை செய்ய கூறுகின்றனர். இதுபோன்ற சட்டவிரோத தற்காலிக நியமனங்களால், அனைவருக்குமான சமவாய்ப்பு மறுக்கப்படுகிறது. பொது வேலைவாய்ப்பை தள்ளி போக வைக்கிறது. தற்காலிக அடிப்படையில் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டவர்களால் அரசின் கொள்கை முடிவை எதிர்க்க முடியாது.  

சில நேரங்களில் இதுபோன்ற தற்காலிக நியமனம் பெற்றோர், பின்னாளில் பணி வரன்முறை செய்யப்படுகின்றனர். அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் மனுதாரர்கள் நியமிக்கப்படவில்லை. இனசுழற்சி மற்றும் இட ஒதுக்கீடு போன்றவை பின்பற்றப்படாமல் தற்காலிக அடிப்படையில் மட்டுமே நியமனம் நடந்துள்ளது. எனவே, இந்த நியமனங்கள் நியமன விதிகளை பின்பற்றியவை அல்ல. சட்டப்படியானதும் அல்ல. நிபந்தனைகளுக்கு உட்பட்ட தற்காலிக நியமனங்களை ஏற்றுக் கொண்டவர்களால் பணிவரன்முறை செய்ய கோர முடியாது. எனவே, இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: