பாறைகள் தொடர்ந்து சரிவதால் பதற்றம்: நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்..!

நெல்லை: நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பாளை. அருகே முன்னீர்பள்ளம் அடுத்த அடைமிதிப்பான் குளத்தில் உள்ள ஒரு கல்குவாரியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சுமார் 350 அடி ஆழத்தில் வெடித்து உடைக்கப்பட்ட பாறைகளை ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் லாரிகளில் ஏற்றும் பணியில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் ஈடுபட்டனர். இந்த பணியில் 2 லாரிகள், 3 ஹிட்டாச்சி இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. அப்போது எதிர்பாராத விதமாக ராட்சத பாறை உடைந்து கல்குவாரியில் விழுந்தது. பாறை இடுக்குகளில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி, காக்கைகுளத்தை சேர்ந்த செல்வகுமார் (30), தச்சநல்லூர், ஊருடையார்புரத்தை சேர்ந்த லாரி டிரைவர் ராஜேந்திரன் (35),

ஹிட்டாச்சி வாகன டிரைவர் இடையன்குளத்தை சேர்ந்த செல்வம் (27), தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர், விட்டிலாபுரத்தை சேர்ந்த முருகன் (40), நாட்டார்குளத்தை சேர்ந்த ஹிட்டாச்சி வாகன டிரைவர் விஜி (27), நாங்குநேரி, ஆயர்குளத்தை சேர்ந்த முருகன் (23) கிளீனர் ஆகிய 6 பேர் சிக்கினர். தகவலறிந்து நெல்லை கலெக்டர் விஷ்ணு, டிஐஜி பிரவேஷ்குமார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நேற்று காலை தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, செய்துங்கநல்லூர் பகுதியை சேர்ந்த முருகன், விஜி ஆகியோர் மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஹெலிகாப்டர் மூலம் மீட்பதற்கான முயற்சி ேதால்வியடைந்தது.

இதனிடையே நேற்று மாலை விபத்து பகுதியில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் பார்த்து நிவாரண நிதியை வழங்கினர். நேற்று மாலை டிரைவர் செல்வத்தை 17 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டு பாளை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனையில் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் கடற்படை தளத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு மேலாண்மை குழுவினர் 30 பேர், நெல்லை அடைமிதிப்பான்குளத்திற்கு சாலை மார்க்கமாக நேற்றிரவு வந்தனர்.

இவர்கள் விபத்து நடந்த கல்குவாரி பகுதியை பார்வையிட்டனர். இன்று அதிகாலை முதல் 2 பிரிவாக உள்ளே இறங்கி மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். பல ஆயிரம் டன் எடை உள்ள 2 பெரிய பாறைகள் உள்ளே விழுந்து கிடப்பதால் அவற்றை அகற்றுவது சவாலாக உள்ளது. பேரிடர் மீட்பு படையினர் இறங்கும் முன்னர் இன்று காலை மீண்டும் பாறைகள் பெயர்ந்து விழுந்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இன்று காலை ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. எஞ்சிய இருவரை மீட்க மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்நிலையில் பாறைகள் தொடர்ந்து சரிவதால் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

பாறைகளில் பெரிய அளவில் விரிசில் ஏற்பட்டு உள்ளதால் அவை இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மண்ணியல் நிபுணர்கள் ஆய்வு செய்து, மீட்பு பணிகளை தொடங்கலாம் என அறிவுறுத்திய பிறகே மீண்டும் மீட்பு பணிகள் தொடங்கும் என மீட்பு பணிகளில் உள்ள காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: