உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு..!: சார்தாம் யாத்திரை தொடங்கி இதுவரை 39 யாத்ரீகர்கள் பலி..நோயாளிகள் யாத்திரை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்..!!

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் சார்தாம் யாத்திரை மேற்கொண்டவர்களில் இதுவரை 39 பேர் உயிரிழந்திருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. புகழ்பெற்ற கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 கோயில்களும் கோடைகாலத்தில் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி, முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் மே 3ம் தேதி அட்சய திருதியை அன்று கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோயில்களின் நடை திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மே 6ம் தேதி கேதார்நாத் கோயிலும், மே 8ம் தேதி பத்ரிநாத் கோயிலின் நடையும் திறக்கப்பட்டது.

இந்நிலையில் யாத்திரை தொடங்கிய நாள் முதல் இதுவரை 39 பக்தர்கள் வழியிலேயே உயிரிழந்திருப்பதாக உத்தராகண்ட் மாநில சுகாதாரத்துறை இயக்குனர் சைலஜா பட் தெரிவித்துள்ளார். மருத்துவ முகாமில் போதுமான மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இருப்பினும் வழித்தடங்களிலும், ஹெலிகாப்டர்களில் இருந்து இறங்கும் போதும் இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவர்கள் அனைவருக்கும் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் மலையேறுவதில் சிக்கல் போன்றவை இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்கள் பெரும்பாலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே மருத்துவ ரீதியாக பாதிப்பு இருப்பவர்கள் யாத்திரையை மேற்கொள்ள வேண்டாம் என உத்தராகண்ட் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. சார்தாம் யாத்திரை தொடக்கத்தில், பயண வழித்தடங்களில் யாத்ரீகர்களின் உடல்நிலை பரிசோதனை செய்யப்படுகிறது என்று டிஜி தெரிவித்தார்.

Related Stories: