கேத்தி பாலாடா பகுதியில் கனமழையால் பீட்ரூட் பயிர்கள் நீரில் மூழ்கின

ஊட்டி :  நீலகிரி மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் கொட்டிய கனமழையால்  கேத்தி பாலாடா பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் பயரிடப்பட்டிருந்த பீட்ரூட்  பயிர்கள் நீரில் மூழ்கின.

 வங்கக்கடலில் உருவான அசானி  புயல் காரணமாக நீலகிரி  மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் விட்டு விட்டு சாரல் மழை  பெய்தது. அதன்பின், நேற்று அதிகாலை 2 மணிக்கு துவங்கிய இடியுடன் கூடிய  கனமழை காலை 10 மணி வரை நீடித்தது.

குறிப்பாக குன்னூர், மஞ்சூர், ஊட்டி,  மசினகுடி, கூடலூர் என மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது.  நீர்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. ஒரேநாளில் 649 மி.மீ., மழை  பதிவானது. கனமழையுடன் மேகமூட்டமான காலநிலை நிலவியதால் வாகன ஓட்டிகள் கடும்  அவதியடைந்தனர். கனமழை காரணமாக, ஊட்டி அருகே கேத்தி பாலாடா சுற்று வட்டார  பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பல  ஏக்கர் பரப்பளவிலான பீட்ரூட் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. நேற்று மாலை  வரை மழைநீர் வடியாத நிலையில் அறுவடைக்கு தயராக இருந்த அவை அழுக கூடிய சூழல்  ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் நிலை நிலவுகிறது.  

நீலகிரி  மாவட்டத்தில் அடுத்த வாரம் மலர் கண்காட்சி நடைபெற உள்ள நிலையில்  தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மலர்கள் அழுக கூடிய அபாயம்  நீடிக்கிறது.

நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையளவு (காலை 8 மணி நிலவரப்படி) மில்லி மீட்டரில் வருமாறு: ஊட்டி 31.8, நடுவட்டம் 15, கல்லட்டி 17, மசினகுடி 14, குந்தா  40, அவலாஞ்சி 27, எமரால்டு 46, கெத்தை 25, பாலகொலா 47, குன்னூர் 40,  பர்லியார் 32, உலிக்கல் 55, கோத்தகிரி 21, கூடலூர் 10, தேவாலா 12 என  மொத்தம் 649.8 மி.மீ., பதிவானது.

Related Stories: