பசுமை திரும்பிய முதுமலை சாலையோரங்களில் வலம் வரும் விலங்குகள்: சுற்றுலா பயணிகள் கண்டுரசிப்பு

ஊட்டி: முதுமலையில் பசுமை திரும்பியுள்ளதால் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். ஆண்டு தோறும் நவம்பர் மாதம் துவங்கி பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு அதிகமாக  காணப்படும். இச்சமயங்களில் மழை பெய்யாமல், பகல் நேரங்களின் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இரவில் பனி கொட்டிவிடும். இதனால், அனைத்து செடி, கொடிகள் மற்றும் மரங்கள் காய்ந்து போய்விடும். மார்ச்  மாதம் முதல் மே மாதம் வரை கடும் வெயில் நிலவும்.

இச்சமயங்களில் பெரும்பாலான  வனப்பகுதிகள் காய்ந்து போய்விடும். அதேபோல், நீரோடைகளில் முற்றிலும் தண்ணீர் குறைந்து வறண்டு போய் காட்சியளிக்கும். இதனால், போதிய உணவு  கிடைக்காமல் விலங்குகள் நீர் நிலைகள் தேடி செல்வது வழக்கம். குறிப்பாக, முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி, பந்திப்பூர் போன்ற பகுதிகளில் உள்ள விலங்கள் தண்ணீர் உள்ள பகுதிகளை நோக்கி இடம் பெயர்ந்துவிடும். இச்சமயங்களில், இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கண்களுக்கு எந்த ஒரு விலங்கும் தென்படாது.

இதனால், முதுமலை மற்றும் மசினகுடி போன்ற பகுதிகளுக்கு செல்லும்  சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கடந்த  ஒரு மாதமாக நீலகிரியில் மழை பெய்து வருகிறது. இதனால், அனைத்து வனங்களிலும் பசுமை திரும்பியுள்ளது. குறிப்பாக, முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தெப்பக்காடு, கார்குடி, மசினகுடி போன்ற பகுதிகளில் பச்சை பசேல் என  காட்சியளிக்கிறது.

அதேபோல், நீரோடைள் மற்றும் ஆறுகளிலும் தண்ணீர் ஓடுகிறது.  இதனால், விலங்குகள் மீண்டும் திரும்ப துவங்கியுள்ளன. இதனால், ஊட்டியில்  இருந்து முதுமலை செல்லும் சாலையோரங்களில் காட்டு யானைகள், காட்டு மாடுகள்,  மான்கள், நீலகிரி லங்கூர் குரங்குகள், மயில் உள்ளிட்ட சில பறவைகள்  சாலையோரத்திலேயே சுற்றித் திரிகின்றன. சர்வ சாதாரணமாக சாலையோரங்களில் வலம் வரும் விலங்குகளை வாகனங்களில் இருந்தபடியே சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதுடன், புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர்.

குறிப்பாக,  குழந்தைகள் இந்த வன விலங்குகளை கண்டு உற்சாகமடைகின்றன. மேலும், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வனங்களில் பசுமை திரும்பியுள்ளதால், விலங்குகள் நாடமாட்டம் அதிகரித்துள்ளது. அதே சமயம், கோடையில் பச்சை பசேல்  என காட்சியளிக்கும் வனங்கள், அணைகள் மற்றும் தேயிலை தோட்டங்களை கண்டு சுற்றுலா பயணிகள் பிரமிக்கின்றனர்.

Related Stories: