டெல்லி தீ விபத்து பலி 27 ஆக அதிகரிப்பு மேலும் 29 பேரை காணவில்லை

புதுடெல்லி: டெல்லியில் முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே வணிகக் கட்டிடத்தில் நடந்த தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. அங்கு பணிபுரிந்தவர்களில் மொத்தம் 29 பேரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.டெல்லியில் முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே, 4 அடுக்குகள் கொண்ட வணிக வளாகக் கட்டிடம் உள்ளது. அங்கு நேற்று முன்தினம் மாலை திடீரென தீப்பற்றியது. அடுத்தடுத்து 4 மாடிகளுக்கும் தீப் பரவியதால் அப்பகுதி புகை மண்டலமாக மாறியது. வணிகக் கட்டிடத்தின் உள்ளே இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்தனர். சிலர் கட்டடத்தில் இருந்து குதித்து உயிர்தப்பிக்க முயன்றனர். தகவலறிந்த மீட்புக் குழுவினர் 24 வாகனங்களில் விரைந்த சென்று தீயைக் கட்டுப்படுத்த போராடினர். எனினும் 27 பேர் உடல்கருகி உயிரிழந்தனர்.12 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப்பணிகளில் தீயணைப்பு பணியினருடன், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

நேற்றுகாலையில் அந்த பகுதியை குளிர்விக்கும் பணி நடந்தது. மேலும் தடயவியல் வல்லுநர்களும் அங்கு வந்து சோதனை நடத்தினார்கள். அப்போது கட்டிடத்தின் 2வது மாடியில் கருகிய நிலையில் மேலும் உடல் பாகங்கள் மீட்கப்பட்டன. இந்த கருகிய உடல் பாகங்கள் எத்தனை பேருடையது என்பதை தடயவியல் நிபுணர்கள் டிஎன்ஏ சோதனை நடத்திதான் உறுதி செய்ய முடியும். எனவே அதற்கு சில நாட்கள் ஆகலாம் என்று தெரிகிறது. நேற்று முதல் தடயவியல் நிபுணர்கள் கட்டிடத்தை ஆய்வு செய்து வருகிறார்கள்.

இதற்கிடையே 4 மாடி கட்டிடத்தில் பணியாற்றிய 29 பேரை காணவில்லை என்பது தெரிய வந்துள்ளது. தீ விபத்து நடந்த 4 மாடி கட்டிடத்தில் சிசிடிவி கேமரா மற்றும் ரூட்டர் தயாரிக்கும் நிறுவனத்தின் அலுவலகம் உள்ள கட்டிடத்தின் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களான ஹரிஷ் கோயல் மற்றும் வருண் கோயல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தீயணைப்புத் துறையிடமிருந்து முறையான பாதுகாப்பு அனுமதி, வணிக கட்டிடம் பெறவில்லை. அதனால், கட்டிடத்தின் உரிமையாளர் மணீஷ் லக்ரா மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. அவர் தற்போது தலைமறைவாக உள்ளார். தீ விபத்து ஏற்பட்ட போது, அதன் இரண்டாவது மாடியில் மீட்டிங் ஒன்று நடந்துள்ளது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். எனவே பெரும்பாலான இறப்புகள் இந்த இரண்டாவது மாடியில் நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீ விபத்து நடந்த கட்டிடத்தை முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் சிசோடியா மற்றும் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர் தீ விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு டெல்லி அரசு சார்பில் ரூ.10 லட்சமும், காயம் அடைந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்குவதாக கெஜ்ரிவால் அறிவித்தார். மேலும் தீவிபத்து சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் தலைமையில் விசாரணை நடத்த அவர் உத்தரவிட்டார்.

Related Stories: