உளுந்தூர்பேட்டை அருகே வடமாநில கும்பல் விவசாயி வீட்டில் 20 லட்சம் கொள்ளை: ரயில்வே கேட்டை உடைத்து காரில் தப்பினர்

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே விவசாயி வீட்டில் ரூ.20லட்சத்தை கொள்ளையடித்த வடமாநில கும்பல், ரயில்வே கேட்டை உடைத்துக்கொண்டு காரில் தப்பினர். சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பு.மாம்பாக்கம்  கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன்(47) விவசாயி. நேற்று முன்தினம் இரவு இவரது மனைவி ஜெயந்தி வீட்டில் இருந்தார். அப்போது  காரில் வந்த 4 பேர் கொண்ட வடமாநில கொள்ளையர் புகுந்து ரூ.20 லட்சத்தை  கொள்ளை அடித்துக்கொண்டு புறப்பட்டனர். சத்தம் கேட்டு ஜெயந்தி எழுந்து கூச்சல்  போட்டார். அக்கம்பக்கத்தினர் ஓடிவரவே காரில் ஏறி கொள்ளையர்கள் தப்பினர்.  

கார் ரயில்வே கேட் அருகே சென்ற போது  ரயில் வருவதற்காக கேட்  போடப்பட்டு இருந்தது. துரத்தி வந்தவர்கள் அருகில் வருவதை பார்த்ததும் கொள்ளையர்கள் கண்  இமைக்கும் நேரத்தில் ரயில்வே கேட் மீது மோதி இரண்டு கேட்டுகளையும்  உடைத்துக்கொண்டு காரில் தப்பினர். இதனால் இரண்டு கேட்டும் உடைந்து  சேதமானது.தகவலறிந்து உளுந்தூர்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், காரில் குஜராத் மாநில பதிவு எண் இருந்தது  தெரியவந்துள்ளது. கார் மோதி ரயில்வே கேட் உடைந்துள்ளதால், மற்ற வாகன ஓட்டிகள் ரயில்வே கேட்டை அச்சத்துடன் கடந்து சென்றனர். இதனை தொடர்ந்து  ரயில்வே ஊழியர்கள் வந்து  புதிய கேட்டை பொருத்தி சரி செய்தனர். சினிமாவில் வருவதுபோல கொள்ளையர்கள் ரயில்வே கேட்டை உடைத்துக்கொண்டு தப்பிய சம்பவம்  உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: