ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த வீட்டில் ரூ.20 லட்சம் கொள்ளை; ரயில்வே கேட்டை உடைத்து தப்பிச் சென்ற வடமாநில கொள்ளையர்கள்

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே இன்று அதிகாலை ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த வீட்டில் ரூ.20 லட்சம் பணத்தை கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்கள், ரயில்வே கேட்டை உடைத்துக்கொண்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பு.மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன் (47), விவசாயி. இவர் இதே கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக மேம்பாலத்தின் அருகில் உள்ள தனது வயல்வெளியில் வீடு கட்டி வசித்து வருகிறார்.

நேற்றிரவு இங்கு லோகநாதன் மனைவி ஜெயந்தி மட்டும் தனியாக தூங்கிக்கொண்டார். இந்நிலையில் இன்று அதிகாலை குஜராத் மாநில பதிவு எண் கொண்ட காரில் வந்த 4 பேர் கொண்ட வடமாநில கொள்ளை கும்பல், லோகநாதன் வீட்டுக்குள் புகுந்து, ரூ.20 லட்சம் பணத்தை கொள்ளையடித்து கொண்டு காரில் தப்பிச் சென்றனர். சத்தம் கேட்டு எழுந்த ஜெயந்தி, கொள்ளையர்களை பார்த்து கூச்சல் போட்டார். உடனே, அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் அவரது உறவினர்கள் அந்த காரை துரத்தி கொண்டு சென்றனர்.

அப்போது சிறிது தூரத்தில் உள்ள ரயில்வே கேட், ரயில் வருவதை முன்னிட்டு மூடப்பட்டிருந்தது. இதனை சற்றும் எதிர்பாராத கொள்ளையர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் ரயில்வே கேட்டில் காரை மோதி 2 ரயில்வே கேட்டுகளையும் உடைத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து லோகநாதன் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: