செயற்கை முறையில் பழுக்க வைத்த 1,500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்-நத்தத்தில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி

நத்தம் : நத்தத்தில் செயற்கை முறையில் பழுக்க வைத்த 1,500 கிலோ மாம்பழங்களை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் அதிகளவில் மா மரங்கள் வைத்து விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். தற்போது மா சீசனையொட்டி மாம்பழங்கள் வரத் தொடங்கியுள்ளன. இவற்றை கொள்முதல் செய்து விற்பனை செய்வதற்காக நத்தம் தர்பார் நகர், செல்லம் புதூர், மின்வாரிய பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாம்பழ குடோன்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்து வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதுடன், வெளிமாவட்டம், வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வருகின்றனர்.

இப்பகுதியிலுள்ள குடோன்களில் மாம்பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சிவராம பாண்டியன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கண்ணன் செல்வம் ஜாபர் சாதிக் ஆகியோர் நத்தம் பகுதியிலுள்ள மாம்பழ குடோன் மற்றும் விற்பனை மையங்களில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது செயற்கை முறையில் ரசாயனம் (ஸ்பிரே) மூலம் பழுக்க வைக்கப்பட்டிருந்த சுமார் 1,500 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்து அவற்றை அழித்தனர். இவற்றின் மதிப்பு ரூ.80 ஆயிரம். மேலும் 6 கடைகளுக்கு அபராத தொகையாக ரூ.12 ஆயிரம் விதிக்கப்பட்டது.

Related Stories: